Published : 10 Aug 2022 12:17 PM
Last Updated : 10 Aug 2022 12:17 PM

ஆளுநர் - ரஜினிகாந்த் சந்திப்பு | கம்யூனிஸ்டுகள் விமர்சனத்துக்கு அண்ணாமலை பதிலடி

சென்னை: "ஆளுநர் அன்றாடம் பலரை சந்திக்கிறார் அப்படித்தான், நடிகர் ரஜினிகாந்தும் ஆளுநரை சந்தித்துள்ளார். ரஜினிகாந்த், ஆளுரிடம் அரசியல் பேசியதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது?" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த நீலாங்கரையில், 75-வது சுதந்திர தினத்தையொட்டி, கடலில் தேசியக் கொடிப் பேரணியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், " ஒரு ஆளுநர் அவர் பதவி வகித்துவரும் அந்த மாநிலத்தில் அனைத்து மனிதர்களையும் சந்தித்துப் பேசுவது அவரின் கடமையும், மரபும் ஆகும். அதுபோன்றுதான் ஆளுநர் மாளிகைக்கு பலர் சென்றுவருகின்றனர்.

இப்படி ஆளுநர் பலரை சந்திக்கிறார். அவ்வாறாகவே நடிகர் ரஜினிகாந்தும் ஆளுநரை சந்தித்துள்ளார். அதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ஆளுரிடம் அரசியல் பேசியதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். இதில் என்ன தவறு இருக்கிறது?

இந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும், திமுகவின் "பி" டீமாக, திமுக கொடுக்கின்ற ஆக்சிஜனில் உயிர்வாழக்கூடிய சில தலைவர்கள் தங்களது இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக ரஜினியை விமர்சித்துள்ளனர்.

ரஜினி கூறியதில் என்ன தவறு, ஆளுநர் அழைத்து அரசியல் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். இந்திய அரசியல், தமிழக அரசியல், சர்வதேச அரசியல் எப்படியிருக்கிறது என்று கேட்கிறார். அரசியல் என்றால் ஏன் பிற்போக்குத்தனமாக யோசிக்க வேண்டும். ஒரு மனிதனை தவறாக பேசுவதற்கு அரசியல் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். அரசியல் இல்லாத வாழ்க்கையை காட்டுங்கள்.

கடலில் செல்லும் படகுகளுக்கு 80 சதவீத மானியம் வழங்குவது, பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என அனைத்துமே அரசியல்தானே. இரண்டு மனிதர்களை திட்டுவதை ஏன் அரசியலாக பார்க்க வேண்டும். ரஜினி நான் அரசியல் பேசினேன் என்று கூறியதற்கு சமுதாயத்தில் நடப்பைத கூறினேன் என்பதுதான் அர்த்தம். அதில் அவர், மத்திய அரசு திட்டம், மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து பேசியிருக்கலாம். ரஜினிகாந்த் தமிழக அரசு நடத்திய செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்குகூட சென்றுவந்தார். இவை எல்லாமே அரசியல்தான்.

கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு வேலை இல்லை. திமுக கொடுக்கின்ற ஆக்சிஜன் சிலிண்டரை முதுகில் சுமந்துகொண்டு சுற்றிக்கொண்டுள்ளனர். நம்மைப் பற்றி தவறாக சொல்லியிருப்பார்கள் என்ற எண்ணம். நீங்கள் நல்ல அரசியல் செய்தால், ரஜினி ஏன் உங்களைப் பற்றி பேசபோகிறார்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x