Published : 10 Aug 2022 11:23 AM
Last Updated : 10 Aug 2022 11:23 AM
சென்னை: பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்வது தான் நல்லாட்சிக்கான இலக்கணம் ஆகும், அதற்கான நடவடிக்கைகளையும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே காரில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்ற 4 பேர் கும்பல், கொளுத்துவாஞ்சேரி என்ற இடத்தில் முள்புதருக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இளம் பெண்ணை கடத்தி சீரழித்த நால்வரும் கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போது கூட அவர்களின் போதை தெளியவில்லை எனத் தெரிகிறது. போதை எத்தகைய சமூகக் குற்றங்களுக்கு வழி வகுக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்.
போதைப் பொருட்களை ஒழிப்பது குறித்து ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தும் முதல்வர் ஸ்டாலின், போதைப் பொருட்களால் இத்தகைய குற்றங்கள் நிகழ்வதையும் கருத்தில் கொண்டு போதை ஒழிப்பு உத்திகளை வகுக்க வேண்டும்.
பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்வது தான் நல்லாட்சிக்கான இலக்கணம் ஆகும். அதற்கான நடவடிக்கைகளையும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT