Published : 10 Aug 2022 04:30 AM
Last Updated : 10 Aug 2022 04:30 AM
சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையைக் கருத்தில்கொண்டு, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4-வது அலகில் உற்பத்தி செய்யப்பட உள்ள, தலா 1,000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்று மத்திய மின் துறைக்கு, தமிழ்நாடு மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக 3 மற்றும் 4-வது அலகுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், 3-வது அலகில் வரும் 2025 மே மாதமும், 4-வது அலகில் 2025 டிசம்பர் மாதத்துக்குள்ளும் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த 2 அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் 2,000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என மத்திய மின் துறை அமைச்சகத்துக்கு, தமிழ்நாடு மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.
மின்தேவை தொடர்ந்து அதிகரிப்பு
இதுதொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ), மத்திய மின் துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, கூடங்குளம் 3 மற்றும் 4-வது அலகுகளில் உற்பத்தி செய்யப்பட உள்ள 100 சதவீத மின்சாரத்தையும் தமிழகத்துக்கே ஒதுக்க வேண்டும். இதுதொடர்பாக மின் துறைஅமைச்சகம், தனது கருத்தை விரைவாக தெரிவிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, மத்திய மின் துறைச் செயலருக்கு கடந்த ஜுலை மாதம் எழுதிய கடிதத்தில், ‘‘தமிழகத்தின் தற்போதைய ‘பீக் ஹவர்’ மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட்டாகும். வரும் 2025-26-ம் ஆண்டுக்குள் இது 21 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழகத்தில் உள்ளது. இந்த மின்நிலையம் சீராக இயங்கத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. கூடங்குளத்தின் 1 மற்றும் 2-வது அலகில் உற்பத்தி செய்யப்படும் 3,150 மெகாவாட் மின்சாரம்100 சதவீதத்தையும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், வெறும் 55 சதவீத மின்சாரம் மட்டுமே தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, தமிழகத்தின் இந்தக் கோரிக்கை குறித்து, தென்மண்டல மின் குழு, தென் மாநிலங்களிடம் இருந்து கருத்து கேட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT