Published : 25 Oct 2016 05:46 PM
Last Updated : 25 Oct 2016 05:46 PM
குட்டி ஈன்ற தாய் யானை மனிதர்களுடன் நன்றாக பழக்கப்பட்டிருந்தால் கூட அவ்வளவு சுலபமாய் யாரையும் நெருங்க விடாது. ஆனால் இந்த காட்டு யானை மயங்கிக்கிடந்து மீட்டு வந்து 6 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் சிநேகத்துடன் பழகுகிறது. இது எங்குமில்லாத அதிசயம் என பாகன்களே அதிசயிக்கிறார்கள். இப்படியொரு சம்பவம் கோவை யானைகள் முகாம் சாடிவயலில் நடந்து கொண்டிருக்கிறது.
கோவை பெரிய தடாகத்தில் கடந்த 19-ம்தேதி பள்ளம் ஒன்றில் பெண்யானை மயங்கிக் கிடந்ததும், அது எழ முடியாமல் தவித்ததும் வனத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த யானையைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட யானைக்கூட்டம் பிளிறியபடி வலம் வர அவற்றை விரட்டி விட்டுப் பத்திரமாக மீட்டு அதற்கு சிகிச்சையளித்தனர். 40 பாட்டில் குளுக்கோஸ் வாட்டர் மற்றும் வைட்டமின் மருந்துகள் என அதற்கு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அதை பழக்கப்படுத்தப் பட்ட கும்கி யானை மற்றும் கிரேன் உதவியுடன் தூக்கி வேறு சமதள இடத்தில் நிறுத்த சில அடி தூரம் மட்டுமே நடந்து திரும்பவும் நடக்க முடியாமல் படுத்துவிட்டது.
அதையடுத்து அந்த யானையை கிரேன் மூலம் மீண்டும் தூக்கி, டிரக்கரில் வைத்து அங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள சாடிவயல் கும்கி யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. ‘35 வயது மதிக்கத்தக்க இந்த பெண் யானை மிகவும் சோர்வாக உள்ளது. ஏதோ விஷச்செடியையோ, ஜீரணமாகாத உணவையோ, பாலிதீன் பைகளையோ தின்றுவிட்டது. எனவேதான் இந்த பலவீனம். எனவே அதற்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது!’ எனத்தெரிவித்தனர் வனத்துறை அலுவலர்கள்.
தினசரி அதற்கு ஊட்டச் சத்து மருந்துகளுடன், கரும்பு, பசும்புல், களியுருண்டை, வெல்லம் போன்றவையும் அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து அந்த யானை சிகிச்சை அளிக்கப்பட்ட 3-ம் நாளே புத்துணர்ச்சியுடன் எழுந்து நின்று கொண்டது. பழக்கப் படுத்தப்பட்ட காட்டுயானைகள் கூட இப்படிப்பட்ட சூழலில் அவ்வளவு தூரம் பாகன்களுக்கும், மருத்துவர்களுக்கும் ஒத்துழைக்குமா என்பது சந்தேகமே.
ஆனால் இந்த பெண் யானை நீண்ட நாள் பழக்கப்பட்டது போல் பின்னங்காலில் சங்கிலியை பொருத்தி அருகில் இருந்த மரத்தில் கட்டி வைக்க எந்த இடையூறும் செய்யாமல் இடம் கொடுத்தது. தூரத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்று அதுவாகவே தண்ணீரை உறிஞ்சிக் குடித்து தூரப்போய் மரத்தடியில் நின்றது. தூரத்தில் பாகன்கள் பசும்புல் கொண்டு வந்து வைத்து விட்டு சென்றால் ரொம்ப சமர்த்தாக அங்கே சென்று புற்களை சாப்பிட்டது. தூரத்தில் நின்று கரும்பை வீசினால் அதையும் எடுத்து சாப்பிட்டது.
பாகன்கள் சாடிவயல் முகாமில் இருக்கும் 2 கும்கி யானைகளுக்கு களியுருண்டை, வெல்லக்கட்டிகள் பிசைந்து வைப்பது வழக்கம். அதையே இந்த யானைக்கும் உருண்டைகளாய் பிடித்துக் கொண்டு போய் வைக்க அதையும் ரொம்ப பழக்கப்பட்டது போல் உண்டது. இதையெல்லாம் பார்த்து பாகன்களுக்கே ஆச்சர்யம். இந்த உடல்நிலை முன்னேற்றம், புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்ட யானைதான் நேற்று (24-ம்தேதி) காலை 4.30 மணிக்கே ஒரு ஆண்குட்டியை ஈன்றது.
குட்டியின் சின்ன சிணுங்கல் சப்தம் கேட்டு 50 அடி தூரத்தில் ஷெட்டில் படுத்திருந்த பாகன்கள் துள்ளிக் குதித்து எழுந்தனர். ஏதோ காட்டு யானைகள்தான் குட்டி யானையுடன் கூட்டத்துடன் வந்து விட்டது என்று நினைத்துவர்களுக்கு நினைத்துப் பார்க்காத அளவுக்கு இந்த பெண் யானை ஒரு குட்டியை ஈன்று நின்றதை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் எழுந்தது.
பொதுவாக காட்டு யானைக் கூட்டத்தில் ஒரு யானை நிறைமாத கர்ப்பமாக இருந்தால் சுற்றியிருக்கும் யானைகள் ரொம்ப கவனமாக அவற்றை கவனித்துக் கொள்ளுமாம். அதுக்கு பிரசவ வலி ஏற்பட்டவுடன் கூட்டத்தில் முதிர்ந்த பெண் யானைகள் அதற்கு பிரசவம் பார்க்கும். சுற்றிலும் ஏனைய பெண் யானைகள் நின்று கொள்ளும். அவை 360 டிகிரி சுற்று வட்டத்திலும் பார்க்கிற மாதிரி முகங்களை வைத்து நின்று கொள்ளும். பிரசவம் முடிந்த பிறகும் அவை சில மணிநேரங்கள் அப்படியே நிற்கும்.
தொடர்ந்து 3 நாட்களுக்கு குறிப்பிட்ட யானைக் கூட்டம் அங்கிருந்து நகராது. மனிதர்களோ மற்ற மிருகங்களோ அந்த இடத்திற்கு 3 கி.மீ. தொலைவுக்கு செல்லவே முடியாது. மூர்க்கம் மிகுந்த யானைகள் துரத்தும். ஓரளவுக்கு குட்டி துள்ளி விளையாடும் நிலைக்கு வந்தபிறகே அவை அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பிக்கும். ஆனால் இந்த காட்டுயானை தனியாகவே ஆண்குட்டியை பிரசவித்திருக்கிறது. ஒரு சின்ன சிணுங்கல் இல்லை. குட்டி ஈன்ற அதிகாலையிலே பாகன்கள் கொடுத்த பசும்புல்லை சாப்பிட்டது. குழந்தையை தானே சுத்தம் செய்து பால் கொடுக்கத் துவங்கியது.
தொட்டிக்கு அருகில் சென்று தண்ணீரை தானும் குடித்து, குட்டிக்கும் புகட்டியதோடு, அதன் மீது தூவல் போடவும் செய்தது. பாகன்கள் கொண்டு வரும் வெல்லம், களியுருண்டைகளையும் வைத்த இடத்திற்கு வந்து சாப்பிட்டது. இன்னும் சொல்லப் போனால் குட்டி அதனிடம் பால்குடிக்கும் போது புகைப்படம் பிடித்த பத்திரிகை புகைப்படக்காரர்களை பார்த்து கூச்சப்பட்டு தள்ளித்தள்ளி நின்றது. அதையடுத்து யானை பால்கொடுக்கும்போது புகைப்படம் பிடிக்க வேண்டாம் என்று வனத்துறையினர் லென்ஸ் மேன்களை எச்சரித்தனர்.
இந்த கண்கொள்ளாக் காட்சியை கோவை குற்றாலத்திற்கு வரும் பொதுமக்களும் வந்து பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து கும்கிகளை பழக்கும் இங்குள்ள பாகன்கள் சிலர் கூறும்போது, 'இந்த அளவுக்கு காட்டு யானைகள் சுலபமாகப் பழகாது. காட்டிலிருந்து பிடிக்கப்படும் யானைகளை கராலில் அடைத்து வைத்து 2 நாட்களாவது பட்டினி போடவேண்டும். அந்த கராலை உடைக்க தன்னாலான முயற்சிகளை அது செய்யும். ஒரு கட்டத்தில் சோர்ந்து போகும். அப்புறம்தான் ஒவ்வொரு கரும்பு, கொஞ்சம் புல் என்று கொடுத்து பழக்க வேண்டும். கராலை விட்டு அதை வெளியே எடுத்து சங்கிலியில் பிணைக்கவே மாதக்கணக்கில் ஆகி விடும். பாகன்கள் கிட்டப்போய் உணவு வைக்கவே 6 மாதங்களுக்கு மேலாகி விடும். அதற்குப்பிறகுதான் அது எங்கள் (பாகன்கள்) சொல்லுக்கும் சைகைக்கும் பழக்கமாகும்.
இது மாதிரி தண்ணி தொட்டிக்கே வந்து தண்ணி குடிப்பதற்கும், வைக்கும் உணவை வந்து எடுத்து தின்பதற்கும் நீண்டகாலம் பிடிக்கும். அதேபோல் கர்ப்பிணி யானைக்கு பிரசவம் பார்க்க முகாமில் உள்ள மற்ற வயது முதிர்ந்த பெண் யானைகள் தேவைப்படும். இதற்கு எதுவுமே இல்லை. அதுவாகவே எல்லாம் செய்வது எங்களுக்கே ஆச்சர்யமாக உள்ளது. இந்த யானை நிச்சயம் 45 வயதுக்கு மேல்தான் இருக்கும். கண்டிப்பாக இதுவரை 4 குட்டிகளாவது இதுவரை ஈன்றிருக்கும். எனவேதான் அது வயது முதிர்ந்த காலத்தில் கர்ப்பமாகி குட்டியை சுமக்க முடியாதபடி படாதபாடு பட்டிருக்கிறது. நிறைமாத கர்ப்பம் ஆன பின்பு நடக்க முடியாமல் படுத்தும் விட்டது. போதிய தீவனங்கள் காட்டுக்குள் இல்லாததாலும், எடுத்து உண்ண தெம்பு இல்லாததாலும் இதை கவனிக்கும் ஆற்றல் கூட்டத்து யானைகளுக்கும் இல்லாது போனது.
இதையெல்லாம் அனுபவபூர்வமாக உணர்ந்ததால்தான் இந்தளவுக்கு தன்னைக் காப்பாற்றிய மனிதர்களுக்கு இப்படி ஒத்துழைப்பு கொடுக்கிறது. இதுவே முதல் முதலாக பிரசவம் ஆகிற பெண் யானையாக இருந்தால் பிளிறி காட்டையே இரண்டாக்கியிருக்கும். அதற்கு குட்டியை பராமரிக்கவும் தெரியாது. பிரசவித்த தாய் யானைதான் அதையெல்லாம் கவனித்துச் செய்ய வேண்டியிருக்கும். அதற்கான அவசியமே இந்த யானைக்கு தேவையில்லாமல் இருந்துவிட்டது. இனி இதன் சங்கிலியை அவிழ்த்து காட்டுக்குள் விட்டாலும் கூட காட்டுக்குள்ளேயே போய் கூட்டத்தில் சேருமா என்பது சந்தேகமே. இங்கே நம்மை கவனித்துக் கொள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் என்று இங்கேயே திரும்பி வர வாய்ப்புண்டு!' என்று புளகாங்கிதம் பொங்க பாகன்கள் பேசினர்.
இப்படிப்பட்ட புத்திசாலிப் பெண் யானை கர்ப்பம் என்பதைக் கூட அறியாமலே 6 நாட்கள் வயிற்று உபாதைக்கு சிகிச்சையளித்து இருக்கிறார்கள் வனத்துறை மருத்துவர்கள் என்பது ஒரு கொடுமையான விஷயம்தான். அதை கிரேன் வைத்து தூக்கும் போதும், அதன் வயிற்றில் பெரிய பெல்ட்டால் சுற்றி இழுக்கும்போதும் அதன் வயிற்றுக்கு அடிபட்டு குட்டிக்கும், தாய்க்கும் ஒன்று கிடக்க ஒன்று ஆகியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று இதனை பார்ப்பவர்கள் அங்கலாய்க்கவும் செய்கிறார்கள்.
அதே சமயம் அவர்கள், 'நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த அளவுக்கு இந்த தாயும் சேயும் கொடுத்து வைத்தவர்கள்' என்று உச்சி மோந்து கொள்ளவும் செய்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT