Published : 09 Aug 2022 08:15 PM
Last Updated : 09 Aug 2022 08:15 PM
புதுச்சேரி: கைதிகளின் ஓவியங்களால் புதுச்சேரி சிறைச்சாலையின் சுவர்கள் மாற்றம் பெற்றுள்ளன. சுதந்திர தினத்தையொட்டி 18 அடி கைத்தறி துணியில் சிறப்பு ஓவியத்தை தயார் செய்து வருகின்றனர்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுவை சிறைச்சாலையில் உள்ள சிறைவாசிகளால் வரையப்பட்ட சுவர் ஓவியங்களை திறந்து வைத்து சிறைத்துறை ஐஜி ரவிதீப்சிங்சாகர் இன்று பார்வையிட்டார். அத்துடன் புதிதாக உருவாகும் பேனர் ஓவியங்களையும் பார்த்தார்.
ஓவியத்தை கைதிகளுக்கு வரைய கற்று தந்த கிறிஸ்டினா கூறுகையில், "சிறைக் கைதிகளுக்கு ஓவியம் வரைய கற்று தந்த இரு வாரங்களில் பல மாற்றங்கள் அவர்களிடம் நிகழ்ந்தது. முன்காலத்தில் செய்த தவறினை திருத்தி புது வாழ்க்கை வாழ ஓவியம் மூலம் வாய்ப்பு ஏற்படுத்தி தருவது பெருமை தருகிறது. ஓவியங்களில் சில தொழில்நுட்பங்களை கற்று தந்தேன். சீக்கிரமாக கற்று ஓவியமாக 200 அடி சுவரில் இயற்கை சூழல், விலங்குகள், காடு தொடர்பான நவீன ஓவியங்கள் வரைந்துள்ளனர்.
இந்திய கலாசாரம் தொடர்பாக கைத்தறி காதி துணியில் 18 அடி பேனரில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி சுதந்திர தின ஓவியம் தயாரித்து வருகிறோம்" என்று குறிப்பிட்டார்.
ஓவியம் வரையும் கைதிகள் கூறுகையில், "தற்போது ஓவியம் கற்று நன்கு வரைந்துள்ளோம். சுதந்திர தினத்தையொட்டி 18 அடி பேனரில் சிறப்பு ஓவியத்தை வரைய ஆரம்பித்துள்ளோம். அதில் இந்திய வரைப்படத்தில் இந்திய கலாசாரங்களை உள்ளடக்கி நவீன முறையில் வரைந்து வருகிறோம்.
இயற்கை சூழல்கள், விலங்குகள் அடங்கிய சுவர் ஓவியங்கள் ஏராளமாக வரைந்துள்ளோம். முன்பு இருந்த மனஉளைச்சலை ஓவியம் மாற்றி நிம்மதி தந்துள்ளது. நல்லதை கற்று விடுதலையாகி நல்ல வாழ்க்கை வாழவே விருப்பம். நீண்ட காலம் சிறையில் உள்ளோரை அரசு விடுதலை செய்யவேண்டும்" என்றார்.
சிறைத்துறை ஜஜி ரவிதீப்சிங்சாகர் கூறுகையில், "சிறைவாசிகள் பலரும் ஓவியம் வரைய கற்று புதிய ஓவியங்களை சுவர்களில் வரைந்துள்ளனர். தற்போது சிறையே சில வாரங்களில் ஓவியங்களால் மாறி விட்டது. ஓவியங்களை பார்வைக்காக வைக்கும் திட்டமுண்டு. சிறையில் தண்டனை காலம் முடிந்தோரை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். சில மாதங்கள் முன்பு சிலரை விடுதலை செய்தோம்.
சிறைத்துறை சட்டவிதிப்படி அடுத்த பட்டியல் தயார் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். பத்தாண்டுகள் சிறையில் இருந்தோரில் தற்போது 27 பேர் கொண்ட பட்டியலை அரசுக்கு தந்துள்ளோம். காவல்துறை, நீதித்துறை உள்ளிட்டோர் அனுமதி தந்து பட்டியல் தயாரித்து அரசுக்கு அனுப்புவோம். அக்குழு கூடி இறுதி முடிவு எடுக்கும். அதன்அடிப்படையில் விடுதலையடைவார்கள்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT