Published : 09 Aug 2022 07:45 PM
Last Updated : 09 Aug 2022 07:45 PM
குமுளி: கனமழையினால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகவே, ரூல்கர்வ் முறைப்படி நீர்மட்டத்தை நிலைநிறுத்துவதற்கான ஆய்வினை தமிழக அதிகாரிகள் மேற்கொண்டனர்.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்மட்டம் 139.6 அடியை கடந்துள்ளதுடன் விநாடிக்கு 11 ஆயிரத்து 893 கனஅடிநீர் வரத்தும் உள்ளது.
மத்திய நீர்வள ஆணையத்தின் ரூல்கர்வ் விதிமுறைப்படி ஆக.10-ம் தேதி வரை 137.5 அடி அளவிற்கே நீரைத் தேக்க வேண்டும். ஆனால் அதீத நீர்வரத்தினால் நீர்மட்டத்தை நிலை நிறுத்துவதில் சிரமம் இருந்து வருகிறது.
ஆகவே, அதிகப்படியான உபரிநீரை வெளியேற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது தமிழகப் பகுதிக்கு 2 ஆயிரத்து 216 கனஅடியும், கேரளப்பகுதிக்கு இன்று மாலை 3 மணி நிலவரப்படி 10 ஆயிரத்து 400 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது. அணையில் கனமழை பருவநிலை தொடர்வதால் கண்காணிப்புப் பொறியாளர் நேசகுமார் தலைமையில் தமிழக அதிகாரிகள் இன்று களஆய்வு மேற்கொண்டனர்.
பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு வைகை கோட்டப் பொறியாளர் நா.அன்புச்செல்வம், உதவி செயற்பொறியாளர்கள் டி.குமார், மயில்வாகனன், உதவிப் பொறியாளர்கள் ராஜகோபால், மாயகிருஷ்ணன், முரளிதரன், நவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேபி அணை, கேலரி, ஷட்டர்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். அதிகப்படியான நீர்வரத்தை கேரளப் பகுதி வழியே வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கனமழையினால் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் 24 மணி நேரமும் நீர்வரத்தை கண்காணித்து, அவற்றை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT