Published : 09 Aug 2022 05:20 PM
Last Updated : 09 Aug 2022 05:20 PM

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தந்த மாயத்தேவர் யார்?

மாயத்தேவர்.

திண்டுக்கல்: அதிமுக கட்சி தொடங்கியவுடன் முதன்முதலில் அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி.யான கே.மாயத்தேவர் உடல்நலக்குறைவால் சின்னாளபட்டியில் இன்று காலமானார். இன்று தமிழக அரசியலில் அசைக்கமுடியாத சக்தியாக திகழும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை முதன்முதலில் பெற்றுத் தந்தவர் மாயத்தேவர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.உச்சம்பட்டி கிராமத்தில் 1934-ம் ஆண்டு பிறந்தவர் கே.மாயத்தேவர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவர், எம்.ஜி.ஆர்., அதிமுக எனும் கட்சியை துவங்கியது முதல் அவருடன் இணைந்து பணியாற்றத் துவங்கினார். கட்சி துவங்கிய பிறகு முதன்முதலில் 1973-ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் அதிமுக சார்பில் மாயத்தேவரை, எம்.ஜி.ஆர். போட்டியிடச் செய்தார். அதிமுக கட்சியின் அரசியல் வரலாற்றில் அந்த கட்சியின் முதல் வேட்பாளர் இவரே. அப்போது மதுரை மாவட்டத்தில் இருந்தது தற்போதைய திண்டுக்கல் மாவட்டம்.

சின்னம் தேர்வு செய்யும் பொறுப்பு: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுகவிற்கு சின்னம் தேர்வு செய்யவேண்டியிருந்தது. சின்னம் தேர்வு செய்யும் பொறுப்பை வேட்பாளரான மாயத்தேவரிடமே ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர். அப்போதைய சுயேச்சை சின்னமான இரட்டை இலையை மாயத்தேவர் தேர்வு செய்தார். இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட்ட கே.மாயத்தேவர் அமோக வெற்றிபெற்றார். அன்று வெற்றிச்சின்னமாக கண்டறியப்பட்ட இரட்டை இலைச் சின்னம் இன்றும் அதிமுகவின் சின்னமாக தொடர்கிறது. இந்த வெற்றிச் சின்னத்தை அதிமுகவிற்கு கண்டு அறிந்து வழங்கியவர் இறந்த மாயத்தேவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 1977-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக எம்.பி., பதவி வகித்தார். அப்போது மத்திய ஆட்சியில் அதிமுக இடம் பெற்றிருந்தது. தனக்கு மத்திய மந்திரி பதவியை எதிர்பார்த்திருந்த மாயத்தேவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தனக்கு கிடைக்கவேண்டிய பதவியை சத்தியவாணிமுத்துவிற்கு வாங்கிக் கொடுத்துவிட்டார் என்ற கோபத்தில் அதிமுகவில் இருந்து விலகினார் கே.மாயத்தேவர். இதன்பின் திமுகவில் இணைந்து 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். திமுகவில் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தார்.

தொடர்ந்து திமுகவில் பல்வேறு பதவிகளில் செயல்பட்டுவந்தார். இதன்பின் உடல்நலக்குறைவு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள அவரது வீட்டிலேயே தங்கியிருந்தார். பல ஆண்டுகளாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. இந்நிலையில், இன்று சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பகல் 12.30 மணியளவில் காலமானார்.

இறந்த கே.மாயத்தேவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், செந்தில்குமரன் என்ற மகனும், சுமதி என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் வெங்கடேசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார்.

இறந்த கே.மாயத்தேவரின் இறுதி யாத்திரை புதன்கிழமை மாலை சின்னாளபட்டியில் உள்ள அவரது வீட்டில் துவங்கி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இறந்த மாயத்தேவர், பிரதமர்கள் இந்திரா காந்தி, வாஜ்பாய், திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களின் அன்பை பெற்றவராக இருந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x