Published : 09 Aug 2022 04:51 PM
Last Updated : 09 Aug 2022 04:51 PM
கிருஷ்ணகிரி: “நெஞ்சில் ஈரம், இரக்கம் இல்லாதவரிடம் கட்சி தலைமைப் பொறுப்பை கொடுக்க முடியுமா, அவர் கட்சி தலைவராக இருக்க முடியுமா?” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் இருந்து இன்று சென்னைக்கு சென்ற அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிசாமிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பில் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பழனிசாமி பேசியது: "அதிமுகவில் மட்டுமே சாதாரண கிளை கழக செயலாளர் கூட பொதுச்செயலாளர் பதவிக்கு வர முடியும். அதற்கு உதாரணமாக நான் உங்கள் முன்னே இருக்கிறேன். திமுகவில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பதவிக்கு வருவார்கள். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதிமுகவில் உழைப்பவர் உயர்ந்த பதவியை அடையலாம்.
அதிமுக தான் வெற்றி: அதிமுகவை எந்த அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலினால் அழிக்க முடியாது. அதிமுகவை தொட்டு கூட பார்க்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா பல்வேறு இன்னல்கள், துன்பங்களை சந்தித்து, அத்தனையும் தூள், தூளாக்கி கட்சி, ஆட்சியை வழி நடத்தினர். அதிமுகவில் சோதனையை உருவாக்கி வரும் விஷமிகள், கருப்பு ஆடுகளை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எதிரிகளுடன், துரோகிகள் கைகோத்து செய்த சதியின் காரணமாக திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. துரோகம் செய்த சதியால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. இனி வரக்கூடிய தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும். திமுகவின் 14 மாத ஆட்சிக் காலத்தில், எல்லா துறைகளிலும் 20, ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர். இந்த ஆட்சியால் எந்த நன்மையும் இல்லை.
கரோனாவால் வேலை வாய்ப்பை இழந்து, பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு பேரிடியாக வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை திமுக அரசு கொண்டு வந்தார்கள். மக்களின் மீது பெரும் சுமையை திமுக அரசு சுமத்தி உள்ளனர். மக்களை பற்றி கவலைப்படாத அரசு திமுக கொள்ளை அடிப்பதில் தான் பல அமைச்சர்கள் முன்னிலையில் உள்ளனர்.
யார் அதிக பணம் கொடுக்கிறாரோ அவர்தான் சிறந்த அமைச்சராக இன்றைய ஆட்சியில் விளங்குகிறார். இவர்கள் குடும்பத்துக்காக ஆட்சியையும், கட்சியையும் நடத்துகிறார்கள். இந்த நேரத்தில் ஸ்டாலினுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பக்கத்து நாடான இலங்கையில் அதிபர் ஒருவர் இருந்தார். அவர் குடும்பம் ஆட்சியில் தலையிட்டது. விளைவு தவறான பொருளாதார கொள்கையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இன்று அந்த நாட்டின் அதிபரே தப்பித்து ஓடி செல்வதை நாமெல்லாம் டிவியில் பார்த்தோம். குடும்பத்தை அரசியலில் கொண்டு வந்த அதிபருக்கே அந்த நிலை என்றால், ஒரு முதல்வருக்கு என்ன ஆகும் என நினைத்து பாருங்கள். மக்களிடையே கிளர்ச்சி ஏற்பட்டால் எதுவும் செய்ய முடியாது. அதே நிலை தமிழ்நாட்டில் வந்து விட கூடாது. திமுக ஆட்சியில் பழி வாங்கும் நடவடிக்கையாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள், அதிமுகவினர் மீது வழக்குகள் பதிவு செய்கிறார்கள்.
இதை செய்வதால் அதிமுகவை முடக்கி விட முடியுமா. எங்களை நேரடியாக சந்திக்க தைரியம் இல்லாமல் எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களின் தொழில்களை முடக்க பார்க்கிறார்கள். உங்களுக்கு தைரியம், திராணி இருந்தால் நேரடியாக அரசியல் ரீதியாக சந்தியுங்கள். நாங்கள் சந்திக்க தயார். இப்போதுள்ள அமைச்சர்கள், திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எப்படி எல்லாம் சொத்து சேர்த்துள்ளார்கள்.
எப்படி எல்லாம் சுற்று சுவர் கட்டி வீடுகளை கட்டி உள்ளார்கள் என எங்களுக்கு தெரியாதா. எங்களால் வழக்கு போட முடியாதா. குறுக்கு வழியில் அதிமுகவை அழிக்க நினைக்காதீருகள். அது எந்த சக்தியாலும் முடியாது. ஏன் என்றால் இது இறைவனால் படைக்கப்பட்ட கட்சி. அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் மாளிகையில் கேட்டை உடைத்து ஜெயலிதாவின் அறைக்கு சென்று அங்கிருந்த கணினிகளை உடைத்து ஆவணங்களை, சொத்து பத்திரங்களை திருடிச் சென்றார்கள்.
அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். அவரா தொண்டர்களுக்கு நன்மை செய்வார். கட்சியில் உயர்ந்த பதவியை கொடுத்து அழகு பார்த்தோம். நெஞ்சிலேயே ஈரம், இரக்கம் இல்லாதவரிடம் கட்சி தலைமை பொறுப்பை கொடுக்க முடியுமா. அவர் கட்சி தலைவராக இருக்க முடியுமா. அதிமுக அலுவலகத்திற்கு வந்த கட்சி நிர்வாகிகளின் வாகனங்களை எல்லாம் அடித்து நொறுக்கினார்கள்.
அதிமுக அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவன் இன்று உயிரோடு இல்லை. ஜெயலலிதாவின் அறைக் கதவை காலால் எட்டி உதைத்தவனுக்கு இன்று 2 கால்களும் இல்லை. இறைவன் இருக்கிறான். அதிமுக அலுவலகம் என்பது எங்களின் கோயில். ஒன்றரை கோடி தொண்டர்களின் கோயிலாக விளங்க கூடியது. வரும் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
இந்நிகழ்வில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ., மாவட்ட செயலாளர்கள் கிழக்கு அசோக்குமார் எம்எல்ஏ, மேற்கு பாலகிருஷ்ணரெட்டி, ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT