Published : 09 Aug 2022 04:43 PM
Last Updated : 09 Aug 2022 04:43 PM

சென்னையில் கொசுத் தொல்லை அதிகரிப்பு: கொசு ஒழிப்புப் பணியில் மாநகராட்சியில் நடப்பது என்ன?

சென்னை: சென்னையில் கொசு தொல்லை அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் புகார் அளித்தால், மருந்து தட்டுப்பாடு இருப்பதாக ஊழியர்கள் கூறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

தென்மேற்கு பருவமழை துவங்கியிருப்பதை தொடர்ந்து, பருவக்கால நோய் பாதிப்புகளை தடுக்கும்படி, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் கடந்த ஜூலை 22-ம் தேதி தெருத் தெருவாக புகைப் பரப்பும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த 15 மண்டலங்களுக்குட்பட்ட 200 வார்டுகளிலும் நாளை முதல் தினந்தோறும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை இரண்டு வேளை கொசுப் புகைப் பரப்பும் பணி மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும், 200 வார்டுகளிலும் சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் வகையில் சிறப்பு நடவடிக்கையாக பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் உதவியோடு வீடு வீடாக சென்று இந்த அப்புறப்படுத்தப்படும் பணி நடக்கவுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே இப்பணிகள் நடந்துள்ளன. இதன் காரணமாக மாநகரில் பல பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் புகார் அளித்தால், மருந்து தட்டுப்பாடு இருப்பதாக அதிகாரிகள் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "சென்னையில் கடந்த சில நாட்களாக கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி ஊழியர்களிடம் புகார் அளித்தால் கொசு மருந்து இல்லை என்று தெரிவிக்கின்றனர். சென்னையில் அடிக்கடி மழை பெய்து வரும் நிலையில், கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது, "சென்னையில் கொசு மருந்துகள் போதுமான இருப்பு உள்ளது. ஒரு சில ஊழியர்கள் அதிக அளவு கொசுத் தொல்லை தொடர்பான புகார் வந்தால் கொசு மருந்து இல்லை என்று தெரிவிக்கின்றனர். இது சரி செய்யப்படும்" என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. கடந்த வாரம் சில பகுதிகளில் மருந்து தட்டுப்பாடு இருந்தது. தற்போது அவை சரி செய்யப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் கொசு மருந்து தரம் இல்லாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது குறித்து மேயர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலர் கொசு மருந்து அடித்தாலும் கொசு குறைவது இல்லை என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x