Published : 09 Aug 2022 01:44 PM
Last Updated : 09 Aug 2022 01:44 PM

குற்ற வழக்குகள் புலன் விசாரணைக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவது இல்லை: உயர் நீதிமன்றம் வேதனை

சென்னை: குற்ற வழக்குகள் புலன் விசாரணைக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை. பொதுநலனில் ஆர்வம் கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு இறுதியில் திரைப்படத்துறை துணை நடிகையாக இருந்த 16 வயது மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத் ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், நான்கு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2013-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. தண்டனையை எதிர்த்து 4 பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், "கைது மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் தொடர்பாக சாட்சியம் அளித்த ஜெபராஜ் என்பவர் காவல்துறை தரப்பின் இருப்பு சாட்சி ஆவார். எனவே, அவரது சாட்சியத்தை கருத்தில் கொள்ளக் கூடாது.மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது" என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, "குற்ற வழக்குகள் புலன் விசாரணையில் பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை என்பதை மறந்து விட முடியாது. பொதுநலனின் அக்கறை கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக முன் வருகின்றனர். காவல்துறையில் இருப்பு சாட்சி என்பதற்காக கைது மற்றும் பறிமுதல் தொடர்பாக சாட்சியம் அளித்த ஜெபராஜ் சாட்சியத்தை ஒதுக்கி விட முடியாது.

இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேருக்கும் எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து இருந்தாலும் கூட, தலைமறைவு குற்றவாளியான சரவணன்தான் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார்.

மனுதாரர்கள் தங்கள் இச்சைக்காக சரவணனுக்கு இரையாகி விட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி , நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x