Published : 09 Aug 2022 12:53 PM
Last Updated : 09 Aug 2022 12:53 PM

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு மக்களிடம் கருத்து கேட்பதாக திமுக அரசு கூறுவது வேடிக்கை: இபிஎஸ் பேச்சு

தருமபுரி அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி

தருமபுரி: ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில், சாதாரண கிராமத்தானிடம் உள்ள சிந்தனை கூட தமிழக முதல்வரிடம் இல்லை என தருமபுரியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று(செவ்வாய்) தருமபுரி வந்தார். அவருக்கு தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகம் அருகில், கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பிரச்சார வேனில் இருந்தபடி பழனிசாமி பேசியது: ''அதிமுக-வை அழித்துவிட வேண்டும் என திமுக நினைத்தது. மாறாக, அதிமுக பிரம்மாண்ட வளர்ச்சியுடன் நிற்பதைக் கண்ட திமுக, அதிமுக-வின் நிர்வாகிகள், தொண்டர்கள் என எல்லோர் மீதும் பொய்வழக்குப் போட்டு கட்சியின் வளர்ச்சியை தடுக்கவும், முடக்கவும் பார்க்கிறது.

இதையெல்லாம் சந்தித்து வீறுகொண்டு முளைக்கும் தெம்பையும், திராணியையும் இந்த இயக்கத்துக்கு எம்ஜிஆர்-ம், ஜெயலலிதாவும் வழங்கியுள்ளனர். தருமபுரி மாவட்டம் அதிமுக-வின் எஃகுக் கோட்டை. இங்கு கிடைத்த வெற்றி தமிழகம் முழுக்க கிடைத்திருந்தால் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திருக்கும்.

திமுக-வுக்கு தற்போது கிடைத்திருக்கும் ஆட்சி சந்தடி சாக்கில் கிடைத்த வாய்ப்பு. அதிமுக-வில் இருந்த சில துரோகிகள் நம்முடன் இருந்துகொண்டே கட்சிக்கு செய்த துரோகத்தால் இன்று திமுக-விடம் ஆட்சி சென்றுள்ளது. துரோகிகளை தற்போது அடையாளம் கண்டு கொண்டோம். அவர்கள் திமுக-வுடன் கைகோர்த்துக் கொண்டு அதிமுக-வை அழிக்க நினைக்கின்றனர். இதுபோன்ற இன்னல்களையும், துன்பங்களையும், துயரங்களையும் தூள் தூளாக்கி ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய பாடுபடுவோம்.

தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை வழங்கினார். அதன் பின்னர் நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும் அரசு சட்டக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரிகள், எண்ணேல்கொல்புதூர் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்கள் என ஏராளமான திட்டங்களை தந்தோம். அதிமுக தொடங்கி வைத்த நீர்ப்பாசன திட்டங்களில் சிலவற்றை கிடப்பில் போட்ட திமுக அரசு, சில திட்டங்களை ஆமை வேகத்தில் செய்து கொண்டிருக்கிறது. திமுக அரசு விவசாயிகளின் நலன் கருதாத அரசு.

எனவே, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து விவசாயிகளுக்கான திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றும். ஒகேனக்கல் உபரி நீரை தருமபுரி மாவட்ட பாசன தேவைக்கு வழங்கும் திட்டத்தை முந்தைய அதிமுக அரசு பரிசீலித்து வந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விவசாயிகளுக்கு நீர் தான் உயிர் என்பதை, விவசாயியான நான் நன்கு அறிவேன். தருமபுரி மாவட்டம் முழுமையையும் பசுமையாக்கும் ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை, மீண்டும் ஆட்சிக்கு வந்து அதிமுக நிறைவேற்றித் தரும்.

கரோனா சூழலால் மக்கள் வருமானம் இழந்து சிரமப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை துன்பத்தில் தள்ளியுள்ளது. அதேபோல, வீட்டுவரியையும் உயர்த்தியுள்ளது. மக்கள் நலன் பற்றி சிந்திக்காதவர் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

தமிழகம் முழுக்க போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. உயிர்பலி எடுக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய இன்றைய திமுக அரசு மக்களிடம் கருத்து கேட்பதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இந்தியாவிலேயே, சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்துக் கேட்ட ஒரே முதல்வர் ஸ்டாலின் தான். சூதாட்ட விவகாரத்தில் சாமான்யனுக்கு உள்ள சிந்தனை கூட முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. 'கருத்துக் கேட்பு' என்ற அவச்சொல்லை நீக்கி உடனே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ-க்கள் கோவிந்தசாமி(பாப்பிரெட்டிப்பட்டி), சம்பத்குமார்(அரூர்), முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், முன்னாள் எம்எல்ஏ சிங்காரம், மாநில விவசாய அணி செயலாளர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x