Published : 09 Aug 2022 11:07 AM
Last Updated : 09 Aug 2022 11:07 AM

ஆக.15 கிராம சபை கூட்டம் | ஆன்லைன் சூதாட்ட தடை, மதுவிலக்கு தீர்மானங்களை நிறைவேற்ற அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மக்களின் உணர்வுகளை அரசிடம் உரக்கச் சொல்லும் வகையில் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்தும்படி தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருக்கிறது. மக்களாட்சியின் ஆணிவேர் கிராமசபைகள் தான். மக்களின் விருப்பங்களை ஆட்சியாளர்களுக்கு அழுத்தமாக தெரிவிப்பதற்கான கருவியும் இது தான்.

தமிழ்நாட்டை இன்று பீடித்துள்ள இரு பெருங்கேடுகள் ஆன்லைன் சூதாட்டமும், மதுக்கடைகளும் தான். ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த ஓராண்டில் மட்டும் 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மது அரக்கன் ஆண்டுக்கு இரு லட்சம் உயிர்களை பலி கொள்கிறான்.

இரு சமூகக் கேடுகளையும் ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தாலும், அவற்றின் தீமைகளை ஆட்சியாளர்களே ஒப்புகொண்டாலும் கூட, ஆன்லைன் சூதாட்டத்தையும், மதுவையும் தடை செய்வது தொடுவானத்தைப் போல நீண்டு கொண்டே தான் செல்கிறது.

மக்களின் உணர்வுகளை அரசிடம் உரக்கச் சொல்லும் வகையில் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக கிராமசபைக் கூட்டங்களில் பாமகவினர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x