Published : 09 Aug 2022 10:55 AM
Last Updated : 09 Aug 2022 10:55 AM

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகையை மாற்றியது கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " தமிழ்நாடு ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து 'தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது' எனவும் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது. ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல.

ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில்,ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகையை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது.

இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது.தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?" என்று அவர் வினவியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x