Published : 09 Aug 2022 06:11 AM
Last Updated : 09 Aug 2022 06:11 AM

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதால் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தல்

சென்னை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதால் தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. கடந்த 2020-ல் தமிழகத்தில் 2,410 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். 2021-ம் ஆண்டில் 6,039 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. நடப்பாண்டில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சுகாதாரத் துறைக்கு சவால்

தமிழகத்தில் ஒருபுறம் கரோனா தொற்றும், மறுபுறம் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சுகாதாரத் துறைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மழைநீர் தேங்கக் கூடாது

தென்மேற்கு பருவ மழை நிலவுவதால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், மாவட்ட சுகாதார இயக்குநரகத்துக்கு தகவல் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அண்டை மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் டெங்கு பரவல் அதிகமாக இருந்தால், அதுகுறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு அனுப்ப வேண்டும்.

வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லூரிகள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தனித்தனியே விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மழைநீர் தேங்காதவகையில் கழிவுகளை அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.

தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், உணவுப் பொருட்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்தல், தனி நபர் சுகாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x