Published : 08 Aug 2022 08:15 PM
Last Updated : 08 Aug 2022 08:15 PM
சென்னை: “போக்குவரத்து துறையை தனியார்மயம் ஆக்கும் நடவடிக்கை இல்லை” என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். இதற்கு போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கிராம மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவை ஆற்றி வருகிறது. மேலும் சமூக நலன், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பிற்காக அனைத்து மகளிர், மாணவர்கள், மூன்றாம் பாலினர், மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் உட்பட பலருக்கு கட்டணமில்லா பேருந்து சலுகையினை வழங்கி வருகிறது.
மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருவது என்பது தனியார்மயமாக்கல் அல்ல என்பதையும், அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT