Published : 08 Aug 2022 07:50 PM
Last Updated : 08 Aug 2022 07:50 PM
சேலம்: தமிழகத்தில் நீர் மின் நிலையங்கள் மற்றும் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், மின் தேவையும் குறைந்ததால், ஒட்டுமொத்த அனல் மின் நிலையங்களிலும் நேற்று 90 சதவீதத்திற்கு மேல் இயக்கம் நிறுத்தப்பட்டது. இது அனல் மின் நிலைய இயக்கத்தில் முக்கிய நிகழ்வு என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, மேட்டூர், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், காற்றாலைகள், மேட்டூர் அணை, பெரியாறு அணை, சோலையாறு அணை, பைக்காரா அணை உள்பட முக்கிய அணைகளில் நிறுவப்பட்டுள்ள நீர் மின் நிலையங்கள் மூலமாகவும் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தனியார் நிறுவனங்கள் மூலம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை உள்பட பல மாவட்டங்களில் காற்றாலைகளிலும் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
மே மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்பதால், அப்போது காற்றாலைகளில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரம், தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், தென்மேற்குப் பருவக்காற்று வீசுவதால், காற்றாலைகளில் தற்போது மின் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. இதேபோல், தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டதால், அவற்றில் உள்ள நீர் மின் நிலையங்கள் மூலமாகவும் தற்போது மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மரபுசாரா மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், மழைக்காலம் என்பதால், தமிழகத்தின் மின் தேவையும் கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் நேற்று அனல் மின் நிலையங்களில் 90 சதவீதத்திற்கும் மேல் இயக்கம் நிறுத்தப்பட்டு, மிகவும் குறைந்த அளவே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இது குறித்து மின்வாரிய உயரதிகாரிகள் சிலர் கூறியது: “தென்மேற்குப் பருவமழைக் காலம் என்பதால், காற்றின் வேகம் காரணமாக, காற்றாலைகளில் சராசரியாக 4,000 முதல் 5,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. மேலும், மேட்டூர், சோலையாறு உள்பட முக்கிய அணைகள் நிரம்பிவிட்ட நிலையில், அவற்றில் உள்ள நீர் மின் நிலையங்கள், கதவணைகள் உள்ளிட்டவற்றில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக, நீர் மின் நிலையங்கள் மூலமாக சராசரியாக 1,000 மெகா வாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், மழைக்காலம் என்பதால், தமிழகத்தில் பாசனத்திற்கான மின் தேவை கணிசமாக குறைந்துவிட்டது. மேலும், வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் ஏசி., மின் விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. விடுமுறை நாட்களில் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மூடப்படும்போது, மின் தேவை மேலும் குறைகிறது.
இதுபோன்ற காரணங்களால், தமிழகத்தில் ஞாயிறு விடுமுறை நாளான நேற்று, மின் தேவை கணிசமாக குறைந்திருந்தது. அதே வேளையில் காற்றாலைகள் மற்றும் அணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகமாக இருந்தது. எனவே, வட சென்னை அனல் மின் நிலையத்தின் முதலாவது பிரிவில் உள்ள 210 மெகா வாட் அலகுகளில் 3-ல் 1 மட்டுமே இயக்கப்பட்டது. 600 மெகா வாட் கொண்ட 2-வது பிரிவில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
மேட்டூரில், தலா 210 மெகா வாட் கொண்ட 4 அலகுகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. 600 மெகா வாட் அலகும் இயக்கப்படவில்லை. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் கொண்ட 5 அலகுகளில் ஒன்று மட்டுமே இயக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 4,320 மெகா வாட் உற்பத்தித் திறனில், நேற்று 176 மெகா வாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. ஒட்டுமொத்த அனல் மின் நிலையங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது போன்ற நிகழ்வாக இது அமைந்தது. குறிப்பாக, அனல் மின் நிலைய வரலாற்றில் இது அரிய நிகழ்வாக அமைந்துள்ளது’ என்றனர்.
இதனிடையே, அலுவலகங்கள் செயல்படத் தொடங்கிய வேலை நாளான நேற்று மின்சாரத்தின் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து, வட சென்னையில் 210 மெகா வாட் அலகுகள் 2, தூத்துக்குடியில் 3 அலகுகள், மேட்டூரில் 210 மெகா வாட் அலகுகளில் 2, 600 மெகா வாட் அலகு ஆகியவற்றில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. சராசரியாக 1,200 மெகாவாட் மின்சாரம் இன்று உற்பத்தியானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT