Published : 08 Aug 2022 06:51 PM
Last Updated : 08 Aug 2022 06:51 PM

“முதலில் ஏரியாவுக்குள் பழனிவேல் தியாகராஜனை வரச் சொல்லுங்கள்” - செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பத்து - புதுக்குளம் பகுதியில் தொகுதி மேம்பாடு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை செல்லூர் ராஜூ எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 

மதுரை: கமிஷனுக்காக நிதியமைச்சர் தெருவிளக்கு டெண்டரை நிறுத்தி வைத்துள்ளதாக அவரது திமுக கட்சியினரே சொல்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாடியுள்ளார்.

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பத்து - புதுக்குளம் பகுதியில் தொகுதி மேம்பாடு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியவது: ''அதிமுகவில் இருந்து சென்றவர்கள் கோபதாபத்தில் ஏதாவது பேசுவார்கள். அவர்கள் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசுதான் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது என்கிறார்கள். எந்த வகையில் வழிகாட்டுகிறது என்பதை திமுக அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. இதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக தலைமையின் கீழ் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இடம்பெறும் என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். மக்களை ஏமாற்றும் நோக்கில் பல பொய்யான தேர்தல் அறிவிப்புகளை வழங்கி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவரது துறையையே ஆய்வு செய்வதில்லை. முதலில் ஏரியாவுக்குள் அவரை வர சொல்லுங்கள். தொகுதி மக்களை சந்திக்க சொல்லுங்கள். அதை செய்யாமல் அவர் எங்களை தொலைநோக்கு பார்வையில்லாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக குறை கூறுகிறார். அவரை பற்றி திமுகவினரே வருத்தப்படுகிறார்கள். நிதி அமைச்சர் கமிஷனுக்காக தெருவிளக்கு போட விடமாட்டேன் என்பதாக சொல்கிறார்கள். அதனாலே தெரு விளக்கு பராமரிப்பை டெண்டர் நிறுத்தி வைத்துள்ளதாக அவரது கட்சியினரே வருத்தப்படுகிறார்கள்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுக்க முழுக்க அவரது தொகுதியில்தான் நடந்துள்ளது. நான்கு மாசி வீதிகளை உலகத்தரத்தில் சீரமைத்துளோம். கழிவுநீர், குடிநீர், மழைநீர் கல்வாய்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்புகளை அவர்கள் மேலும் வலுப்படுத்தியிருக்க வேண்டும். பராமரித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை சரியாக செய்யாததாலே தற்போது மழைநீர் தேங்குகிறது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x