Published : 08 Aug 2022 03:20 PM
Last Updated : 08 Aug 2022 03:20 PM
சென்னை: கிண்டி - கத்திபாரா பகுதியில் மாநகரப் பேருந்து மோதி பெயர் பலகை விழுந்து ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நேரில் சென்று வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நேற்றைய தினம் (7-8-2022), பெருங்களத்தூரிலிருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று, GST சாலையில் ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாகச் செல்லும்போது, சாலையின் அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி, அப்பலகை சாலையில் சாய்ந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பி.சண்முக சுந்தரம் என்பவர் பலத்த காயமுற்று, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதோடு, போக்குவரத்துக் கழக நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும், ஆகமொத்தம் மூன்று லட்சம் ரூபாயினை நிவாரணமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்நிதியினை நேரில் சென்று வழங்கினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT