Published : 08 Aug 2022 03:20 PM
Last Updated : 08 Aug 2022 03:20 PM

தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் கடலில் கலப்பதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க தவறியதாக நீர்வளத் துறை செயலாளர், வருவாய்த் துறை செயலாளர் உள்ளிட்டோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மழைக்காலங்களில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்தக் கோரி வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தலைமை செயலாளர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழுவை அமைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள், கழிவு நீர் கால்வாய்களை 6 மாதங்களுக்குள் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். இந்த பணிகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டும். கடமை தவறும் அதிகாரிகள் மீது தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

மேலும், நீர்நிலைகளை பாதுகாக்க தவறினால், நமது தாத்தா ஆற்றில், பார்த்த தண்ணீரை, நம் பொற்றோர் கிணற்றில் பார்த்தனர், தற்போதைய தலைமுறை குழாய்களில் நீரை பார்த்தது, நமது பிள்ளைகள் குப்பிகளில் தண்ணீரை பார்த்தனர், எனவே நாம் நமது எதிர்கால சந்ததியினரை கேப்ஸ்யூல்களில் நீரை பார்க்கும் அவலநிலை ஏற்படுத்தி விடக்கூடாது.

மக்கள் வரிப்பணத்தை இலவசங்கள் வழங்க பயன்படுத்துவதை விடுத்து மக்களுக்கு பயன்படும் வகையில் மாநிலம் முழுவதும் கூடுதல் அணைகள் கட்டுவது குறித்து சிந்திக்க வேண்டும். இயற்கையின் வரப்பிரசாதமான நீரை வீணாக்கினால், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கேப்டவுன் நகருக்கு ஏற்பட்டதை போல தமிழகத்திலும் தண்ணீர் இல்லா நாள் வரப்போவது வெகு தூரத்தில் இல்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை எனக் கூறி வி.பி.ஆர்.மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அப்துல் நசீர், ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீர்வளத்துறை செயலாளர், வருவாய் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க மனுதாரரான வி.பி.ஆர்.மேனனுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x