Published : 08 Aug 2022 01:40 PM
Last Updated : 08 Aug 2022 01:40 PM
சென்னை: “தேசியக் கொடியின் மீது பாஜகவுக்கு திடீர் பற்று ஏற்பட்டுள்ளது எனபதை சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் கடமை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் 200 ஆண்டுகால ஆட்சியை எதிர்த்து, ஜனநாயக முறையில் போராடி 1885-இல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அகிம்சை முறையில் போராடி இறுதியில் 1947-இல் சுதந்திரத்தை பெற்றோம். 1920-களுக்குப் பிறகு அண்ணல் காந்தியடிகள் தலைமையில் மாபெரும் மக்கள் இயக்கமாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம், இறுதியில் ஆகஸ்ட் 9 1942இல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் நடைபெற்றது. அதையொட்டி இந்தியா விடுதலை பெற்று பிரதமர் நேரு தலைமையில் ஆட்சி அமைந்தது.
இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய காங்கிரஸ் வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் 14 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 கி.மீ. தூர பாத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்கள் அனைவரும் கைராட்டை பொறித்த மூவர்ண கொடியை கையில் ஏந்தி, இந்திய விடுதலையின் பெருமைகளையும், அதைத் தொடர்ந்து 55 ஆண்டுகள் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளையும் விளக்கிடும் வகையில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.
இதன்மூலம் இந்தியாவின் வளர்ச்சியில் பண்டித நேரு, லால்பகதூர் சாஸ்திரி, அன்னை இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி, பி.வி. நரசிம்மராவ், டாக்டர் மன்மோகன்சிங் ஆகியோர் தலைமையில் அமைந்த மத்திய காங்கிரஸ் அரசு இந்தியாவின் வளர்ச்சியில் செய்துள்ள அளப்பரிய சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி நினைவுகூர வேண்டிய அரிய வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கை எவரும் மூடி மறைத்திட முடியாது. இந்தியாவின் தேசியக் கொடியில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிற ஈடுபாட்டையும், பங்களிப்பையும் எவரும் மறுத்திட இயலாது. ஆனால், தேசியக் கொடியின் மீது பாஜகவுக்கு திடீர் பற்று ஏற்பட்டு அதற்கு சொந்தம் கொண்டாட முற்பட்டுள்ளது. தேசியக் கொடியை பாஜக உள்ளிட்ட எவரும் ஏற்றுக் கொள்வது குறித்து நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், திடீரென்று அந்தப்பற்று ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை நமக்கு உண்டு.
நாகபுரியில் 1925-இல் தொடங்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பு தான் பாஜகவின் தாய் ஸ்தாபனம். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட அரசியல் இயக்கம் தான் முதலில் ஜனசங்கமாக தொடங்கி தற்போது பாரதிய ஜனதாவாக செயல்பட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் என்ன சொல்கிறதோ, அதைத் தான் அடல்பிகாரி வாஜ்பாய் செய்தார். அதே பாதையில் தான் பிரதமர் மோடியும் செயல்பட்டு வருகிறார். மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்துவது தான் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம். அத்தகைய சீர்குலைவு சக்திகள் திடீரென தேசியக் கொடிக்கு சொந்தம் கொண்டாடுவது நமக்கு வியப்பை தருகிறது.
பா.ஜ.க.வின் தாய் ஸ்தாபனமான ஆர்எஸ்எஸ் தலைமை நிலையமான நாகபுரியில் எத்தனை முறை தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடியிருக்கிறார்கள்? ஆகஸ்ட் 15 1947, ஜனவரி 26 1950 ஆகிய இரண்டு நாட்களைத் தவிர, 52 ஆண்டுகள் தொடர்ந்து தேசியக் கொடியை ஆர்எஸ்எஸ் தலைமை நிலையமான நாகபுரியில் ஏன் ஏற்றவில்லை? தேசியக் கொடி மீது அவர்களுக்கு உண்மையான பற்று இல்லை என்பதைத் தான் ஆர்எஸ்எஸ், பாஜகவின் இத்தகைய அலட்சியப் போக்கு நமக்கு உணர்த்துகிறது.
எனவே, விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கையும் வகிக்காத ஆர்எஸ்எஸ், பா.ஜ.க.வினர் வருகிற ஆகஸ்ட் 15 அன்று தேசியக் கொடிக்கு உரிமை கொண்டாடுகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தேசியக் கொடியை அவர்கள் மதித்து ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய இந்திய தேசிய காங்கிரசுக்கு ஆகஸ்ட் 15 அன்று கோலாகலமாக கொண்டாடுவதற்கும், தேசியக் கொடியை சொந்தம் கொண்டாடுகிற உரிமையை நிலைநாட்டும் வகையிலும் நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டுமென மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளையும், காங்கிரஸ் நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
ஆகஸ்ட் 9 அன்று தென்காசியில் நடைபெறுகிற பாத யாத்திரையிலும், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் நடத்துகிற சைக்கிள் யாத்திரையின் தொடக்க விழாவிலும் நான் பங்கேற்கிறேன். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10 பொள்ளாச்சி, ஆகஸ்ட் 11 தருமபுரி, ஆகஸ்ட் 12 விழுப்புரம், ஆகஸ்ட் 13 சோளிங்கர் ஆகிய இடங்களில் நடைபெறும் பாத யாத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறேன். காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரையைப் போல காங்கிரஸ் கட்சி நடத்துகிற பாத யாத்திரை மக்களின் மனதை நிச்சயம் கவரப் போகிறது. இதன்மூலம் விடுதலைப் போராட்ட உணர்வுகள் நினைவுகூரப்பட்டு தேசிய மறுமலர்ச்சிக்கு வித்திடுகிற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் தேசியத் திருவிழாவாக 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடி, அதன்மூலம் தேசிய எழுச்சியை உருவாக்க வேண்டுமென அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்'' என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT