Published : 08 Aug 2022 01:03 PM
Last Updated : 08 Aug 2022 01:03 PM
உதகை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தால் 4-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. கேரள எல்லையை ஒட்டிய கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
விடிய விடிய சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் பல முக்கிய சாலைகளிலும் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்கு ரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆறுகளில் இருந்து தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. கூடலூர் அருகே புறமணவயல் ஆதிவாசி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 66-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று காலை முதல் இன்று காலை வரை நீடித்த மழையால் அங்குள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் விரைந்து சென்று அங்கிருந்த 66 குடும்பத்தினரை மீட்டு முகாமில் தங்க வைத்தனர்.
இதேபோல் பந்தலூர் அருகே உள்ள ஆதிவாசி கிராமத்தையும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தவித்தனர். அங்கிருந்த 15 குடும்பத்தினர் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், முதுமலை அருகே தெப்பக்காடு வனப்பகுதியில் உள்ள மாயாற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மாயாற்றின் குறுக்கே கூடலூர் - மசினகுடி பகுதிகளை இணைக்கும் தரைப்பாலம், மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முழுவதும் நீரில் மூழ்கியது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடியே சென்றது. இதையடுத்து கூடலூர் - மசினகுடி தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
உதகை, மஞ்சூர், கோத்தகிரி, குன்னூர் சுற்றுப்புற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் கடும் குளிர் நிலவி வருகிறது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 19 செ.மீ, கூடலூரில் 18, பந்தலூரில் 15 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர் உள்ளிட்ட 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT