Published : 08 Aug 2022 11:19 AM
Last Updated : 08 Aug 2022 11:19 AM
சென்னை: "இந்தியாவில் நிலுவையிலுள்ள மொத்த வழக்குகளில் 10 சதவீதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் நிலுவையில் உள்ளன என்பதிலிருந்தே, அங்கு எவ்வளவு வழக்குகள் தேங்கியுள்ளன என்பதை அறியலாம். உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருப்பது தான் இதற்கு காரணம் ஆகும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலை 29-ஆம் தேதி நிலவரப்படி 5.63 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும்,அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள உயர் நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றம் நான்காவது இடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.இந்த புள்ளிவிவரம் கவலையளிக்கிறது.
இந்தியாவில் நிலுவையிலுள்ள மொத்த வழக்குகளில் 10 சதவீதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் நிலுவையில் உள்ளன என்பதிலிருந்தே, அங்கு எவ்வளவு வழக்குகள் தேங்கியுள்ளன என்பதை அறியலாம். உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருப்பது தான் இதற்கு காரணம் ஆகும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. அடுத்த மாதத்தில் இரு நீதிபதிகளும், டிசம்பர் மாதத்தில் இன்னொரு நீதிபதியும் ஓய்வு பெறுகின்றனர். அதனால் காலியிடங்கள் 22 ஆக உயரும். நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் காலியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் வன்னியர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்றும் அறிகிறேன். நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர் உள்ளிட்ட அனைத்து பின்தங்கிய சமூகங்களுக்கும் சமூக நீதி வழங்கப்பட வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT