Last Updated : 07 Aug, 2022 07:27 PM

1  

Published : 07 Aug 2022 07:27 PM
Last Updated : 07 Aug 2022 07:27 PM

காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு: மேட்டூர் அணையில் இருந்து 1.20 லட்சம் கனஅடி நீர் திறப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று காலை 8 மணிக்கு விநாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து. தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு மேட்டூர் அணைக்கு விநாடிக்கு ஒரு லட்சத்து 21 ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து, அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 120.06 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.56 டிஎம்சி-யாக உள்ளது. அணையில் இருந்து உபரி நீர் விநாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் நீடித்துள்ளது.

மேட்டூர் அணை நீர் தேக்க பகுதிகளான பண்ணவாடி, செட்டிப்பட்டி பகுதிகளில் பரிசல் துறை போக்குவரத்து இன்று ஆறாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, பூலாம்பட்டி - ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெருஞ்சிப்பேட்டை இடையேயான விசைப்படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுங்கடங்காமல் காவிரி ஆற்றில் ஓடும் வெள்ள நீரால், மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பூலாம்பட்டியில் உள்ள நீர் மின் கதவணையிலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட காவிரி கரையோர பகுதிகளில் வருவாய் துறை, நீர் வளத்துறை, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து வெள்ளப்பெருக்கு பகுதிகளில் தொடர்ந்து 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி ஆற்றில் குளிக்கவும், துணிதுவைக்க, செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் வளத்துறை அதிகாரிகள் அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக்கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, ஆற்றில் நீர் வரத்து நிலவரங்களை கூர்ந்து கவனித்து, கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், கூடுதலாக நீர் வந்தால், 16 கண் மதகுகளை திறந்து விட பணியாளர்களை தயார் நிலையில் நிறுத்தி வைத்து, கண்காணித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x