Last Updated : 07 Aug, 2022 03:11 PM

 

Published : 07 Aug 2022 03:11 PM
Last Updated : 07 Aug 2022 03:11 PM

புதுச்சேரி நிதிச்செயலர் அதிகார துஷ்பிரயோகம்: முதல்வரிடம் புகார் அளிக்க முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி நிதிச்செயலர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதால் இதுகுறித்து முதல்வரிடம் புகார் அளிக்க அமைச்சக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

அலுவலக பணியாளர்களை வீட்டுப்பணிக்கு பயன்படுத்துவதுடன், அலுவலக காரை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்துவது உட்பட நிதிச்செயலர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமைச்சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரை சந்திக்க உள்ளதாககவும் அவர்கள் தெரிவித்தனர்.

புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ''புதுச்சேரி நிதித்துறைச் செயலர் பிரசாந்த் கோயல், பொருளாதாரத்துறை இயக்குநர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

நிதிச் செயலர் பிரசாந்த் கோயல், நிதியை ஒழுங்காக பயன்படுத்த வேண்டும் என்று அரசு துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆனால். அவர் அதனை பின்பற்ற மாட்டார். துறைக்கு ஆட்கள் எடுக்க கட்டுப்பாடுகளையும் விதித்தார். ஆனால் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநரகத்திற்கு அமர்த்தப்பட்ட ஆட்களை தன் வீட்டு சொந்த வேலைக்கு உபயோகப்படுத்தி வருகிறார்.

ரூ. 2.75 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறும் நிதி செயலர், அவுட்சோர்சிங் முறையில் வாங்கப்பட்ட காரை தனது குடும்பத்தினரின் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்துகிறார். இதனால் எந்த நோக்கத்துக்காக அரசு செலவினம் செய்யப்பட்டதோ அதன் நோக்கம் செயல் இழந்துள்ளது. அரசு பணம் வீணாகிறது. அதே நேரத்தில் புதுச்சேரி வளர்ச்சிக்காக அரசு அனுப்பும் பல திட்டங்களுக்கான கோப்புகளை திருப்பி அனுப்புகிறார்.

முதல்வர் ரங்கசாமிக்கு மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிக்கிறார். மத்திய அரசுக்கு தவறான தகவல்களை அனுப்புகிறார். தலைமைச்செயலர் புதியவர் என்பதால் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். இம்முறைகேடுகளை சுட்டிக்காட்டினோம். இதையடுத்து முறைகேடுகளை சுட்டிக்காட்டிய ஊழியர்கள் மீது துறை இயக்குநர் ராமகிருஷ்ணன் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.

சங்கத்தின் பொதுச்செயலர் ராஜேந்திரனை பணி இடமாற்றம் செய்துள்ளனர். இந்த இடம் மாற்றத்தினால் அங்கு பணிபுரியும் அமைச்சக ஊழியர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இரு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரை சந்திக்க உள்ளோம்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x