Published : 25 Jun 2014 12:16 PM
Last Updated : 25 Jun 2014 12:16 PM
நதிகள் இணைப்பு, நீர்நிலைகளை தூர் வாருதல், சிறப்புப் பாசனத் திட்டங்களை நிறைவேற்றுதல் ஆகிய 3 அம்சத் திட்டங்களைச் செயல்படுத்தினால் தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு பெறலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தென்மேற்குப் பருவமழையும், கர்நாடகமும் கைகோர்த்துக் கொண்டு தமிழகத்தைக் கைவிட்டதால் காவிரி பாசன மாவட்டங்களில் இந்த ஆண்டும் குறுவைப் பருவ சாகுபடி கனவாகி விட்டது. தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்து விட்ட நிலையில், இனிவரும் காலங்களில் யாரையும் நம்பாமல் ஓரளவாவது பயிர் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த 2000 ஆவது ஆண்டிலிருந்து இதுவரையிலான 15 ஆண்டுகளில் சுமார் 10 ஆண்டுகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படாததன் காரணமாக குறுவை சாகுபடி செய்யப் படவில்லை என்பது கசப்பான உண்மை. ஆனால், இதிலிருந்து நாம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதங்களில் காவிரி பிரச்சினை பற்றி பேசுவதுடன் அரசியல் கட்சிகளும், உழவர் அமைப்புகளும் ஒதுங்கிக் கொள்கின்றன. ஆட்சியாளர்களும் மும்முனை மின்சாரம் வழங்குகிறோம்; அதைக்கொண்டு நிலத்தடி நீரை எடுத்து குறுவை பயிரிட்டுக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை வழங்குவதுடன் தங்கள் கடமையை முடித்துக் கொள்கிறார்கள்.
ஆனால், தொடர் வறட்சிக் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதாலும், மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைக்காததாலும் குறுவை சாகுபடி 20% பகுதிகளில் கூட நடப்பதில்லை என்பதையும், இதேநிலையும், இயற்கை வளங்களைச் சுரண்டும் வழக்கமும் தொடர்ந்தால் அடுத்த பல ஆண்டுகளில் காவிரிப் படுகையே பாலைவனமாக மாறும் ஆபத்து இருப்பதையும் நாம் நினைவில் கொள்வதில்லை.
அண்டை மாநிலமான ஆந்திராவும் ஒரு காலத்தில் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவித்த மாநிலம் தான். வறட்சியால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு கடன் தொல்லை தாங்கமுடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகும் நிலைக்கு ஆந்திரம் தள்ளப்பட்டது.
ஆனால், 2004 ஆம் ஆண்டில் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி ஜலயாக்னம் (நீர் யாகம்) என்ற பெயரில் தொடங்கி வைத்த நீர்ப்பாசனத் திட்டத்தின் பயனாக, ஆந்திராவில் ரூ.70,000 கோடி செலவில் 70 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றிருக்கிறது.
பாலைவனமாக மாறிவிடும் என்று அஞ்சப்பட்ட தெலுங்கானா இப்போது வளம் கொழிக்கும் பகுதியாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் ஆந்திராவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை மாறி மகிழ்ச்சியாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் எந்த பாசனத்திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. ஆந்திரா அளவுக்கு தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகள் இல்லை என்பது உண்மை தான் என்றாலும், இருக்கும் நீர் ஆதாரங்களைக் கூட நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில்லை. 2008-09 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட காவிரி& அக்கினியாறு- கோரையாறு- பாம்பாறு - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை.
திட்டமிட்டு செயல்பட்டால் தமிழக ஆறுகள் அனைத்தையும் 8 ஆண்டுகளில் இணைத்துவிட முடியும். ஆனால், அறிவிக்கப்பட்டு 6 ஆண்டு ஆகியும் இந்த நதிகள் இணைப்புத் திட்டங்கள் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கின்றன.
தமிழகத்தில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைக்க மொத்தமாக ரூ.50,000 கோடி செலவாகும். நதிகள் இணைப்பின் மூலம் உருவாக்கப்படும் நீர்வழிப்பாதை, மின்உற்பத்தி, மீன் வளம் போன்றவற்றால் ஆண்டுக்கு ரூ.5000 கோடி வருமானம் கிடைக்கும். இதைக்கொண்டு இதற்காக செலவிட்ட தொகையை 10 ஆண்டுகளில் எடுத்துவிட முடியும். மேலும், நதிகள் இணைப்பின் மூலம் தமிழகத்தில் 75 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் தமிழகத்தில் விவசாயம் செழிக்கும்.
நீர் நிலைகள் தூர் வாரப்படாததாலும், தடுப்பணைகள் கட்டப்படாததாலும் தமிழகத்தில் ஆண்டுக்கு 60 முதல் 70 டி.எம்.சி மழை மற்றும் வெள்ள நீர் வீணாக கடலில் கலக்கிறது. நீர்நிலைகளை தூர் வாருவதுடன், செயற்கை நீர் நிலைகளை உருவாக்கி இந்த தண்ணீரை தேக்கி வைப்பதன் மூலம் ஆண்டு முழுவதும் பயிர் சாகுபடி செய்ய முடியும்.
எனவே, நதிகள் இணைப்பு, நீர்நிலைகளை தூர் வாருதல், சிறப்புப் பாசனத் திட்டங்களை நிறைவேற்றுதல் ஆகிய 3 அம்சத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் வேளாண் மறுமலர்ச்சியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT