Published : 07 Aug 2022 04:40 AM
Last Updated : 07 Aug 2022 04:40 AM
இன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படும் நிலையில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், சுந்தரபாண்டியம் ஆகிய பகுதிகளில் கைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. ராஜபாளையம், சுந்தரபாண்டியம் ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 4,500-க்கும் மேற்பட்ட கைத்தறிக் கூடங்களும், அருப்புக்கோட்டை பகுதியில் சுமார் 1,500 கைத்தறிக் கூடங்களும் இயங்கி வருகின்றன. இதில், சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள கைத்தறிக் கூடங்களில் செயற்கைப் பட்டுச் சேலைகள், பருத்தி ரக சேலைகள், 60-60, 80-60, 80-120 எனப் பல்வேறு நூல் ரகங்களில் கைலிகள், துண்டுகள், கைத்தறி சேலைகள், முட்டா சேலைகள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் விற்பனைக்காக கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
ராஜபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கைத்தறிக் கூடங்களில் மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இலவச பள்ளி சீருடைகளும், செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை இலவச சேலைகளும் நெய்வதற்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறையால் ஆர்டர்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு 70 லட்சம் மீட்டர் பள்ளிச் சீருடைகள் தயாரிக்க ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் 53 கூட்டுறவு கைத்தறி சங்கங்கள் பதிவு செய்துள்ளன. சுமார் 9 ஆயிரம் தறிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 15 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இச்சங்கங்களுக்கு மட்டுமே அரசு ஆர்டர்கள் வழங்கப்படுகிறது. கைத்தறித் தொழிலுக்கு அரசு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குகிறது.
கைத்தறி சேலைகளுக்கு என்றுமே தனி மதிப்பு உண்டு. ஒரு சேலை நெய்து முடிக்க சராசரியாக 2 நாட்கள் ஆகும். மேலும் கையால் நூல் கோர்த்து தறியில் நெய்வதால் நூல் நெருக்கமாகவும், தரமாகவும் இருக்கும். ஒரு தொழிலாளி சுமார் 15 ஆயிரம் முறை தனது கை, கால்களை அசைத்தால்தான் ஒரு சேலையை முழுமையாக நெய்ய முடியும்.
கைத்தறி தொழிலுக்கு தொடர்ந்து அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், தொழிலாளர் களுக்கு கூலி உயர்வு மற்றும் ஆண்டு முழுவதும் ஆர்டர்கள் கொடுத்தால்தான் கைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாப்படும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநர் ரகுநாத் கூறியதாவது:
கைத்தறித் தொழிலைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2022-ம் ஆண்டில் இலவச சேலை வழங்கும் திட்டத்துக்காக 21 லட்சம் சேலைகளுக்கும், 2022-23-ம் ஆண்டுக்கு பள்ளிச் சீருடைக்காக 70 லட்சம் மீட்டர் உற்பத்தி செய்யவும் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக நெசவாளர்களுக்கு உரிய கூலியும் கொடுக்கப்பட்டு வருகிறது. கைத்தறி நெசவாளர்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ.60 கோடி அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இது தவிர சேமிப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளும், 3,500 பேருக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் ஓய்வூதியமும், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் கடனும் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT