Published : 11 Jun 2014 06:31 PM
Last Updated : 11 Jun 2014 06:31 PM

அனாதையாக கிடந்த கைப்பையில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணம்- நேர்மையுடன் செயல்பட்ட போலீஸாருக்கு பாராட்டு

ராசிபுரம் அருகே சாலையோரத்தில் கிடந்த கைப்பையில் ரூ. 29 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்துள்ளது. அதை மீட்ட வெண்ணந்தூர் ரோந்து போலீஸார் இருவர், அப்பைக்கு சொந்தமானவரை கண்டறிந்ததுடன், அதை நேர்மையுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தனர். அவர்களது நேர்மையை கண்காணிப்பாளர் பாராட்டியதுடன், பரிசு வழங்கி கவுரவித்தார்.

நாமக்கல் மாவட்டம் முத்துடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் டாக்டர் செல்லமுத்து. கடந்த 2ம் தேதி, தான் பணிபுரியும் நாட்டராம்பள்ளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரு சக்கர வாகனம் மூலம் சென்றார். அப்போது அவர் தனது கைப்பையை தவற விட்டுள்ளார். இந்நிலையில் ராசிபுரம் அரசுப் போக்குவரத்து கிளைப் பணிமனை வழியாக வெண்ணந்தூர் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸார் எஸ். அங்கமுத்து, எஸ். அழகர்சாமி ஆகிய இருவரும் ரோந்துப் பணி மேற்கொண்டிருந்தனர்.

அப்போது சாலையில் கிடந்த கைப்பையை எடுத்து திறந்து பார்த்துள்ளனர். அதில், ரூபாய் நோட்டுக் கட்டுகள், சாவி உள்ளிட்ட உடைமைகள் இருந்தன. மேலும், பையில் இருந்த எலக்ட்ரிக்கல் உதிரிபாக கடை ஒன்றின் முகவரியும் இருந்தது. அந்த முகவரியில் விசாரித்தபோது, அது டாக்டர் செல்லமுத்துவிற்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. அதை உறுதிபடுத்தியதையடுத்து அப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க ப்பட்டது.அதை கண்காணிப்பாளர் செந்தில்குமார் பெற்று சோதனை செய்ததில் ரூ. 29 ஆயிரம் ரொக்கம் இருந்தது. அதையடுத்து சம்மந்தப்பட்ட டாக்டர் செல்லமுத்துவை வரவழைத்து அவரது பை, ரொக்கப்பணம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது. மேலும், நேர்மையுடன் செயல்பட்ட போலீஸார் எஸ்.அங்கமுத்து, எஸ். அழகர்சாமியையும் கண்காணிப்பாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x