Published : 06 Aug 2022 10:49 PM
Last Updated : 06 Aug 2022 10:49 PM
ஆண்டிபட்டி: வைகை அணையில் உள்ள மீன்கள் எதிர்நீச்சல் மூலம் ஆற்றை நோக்கி அதிகளவில் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் உள்ளூர் மக்கள் பலரும் அவற்றைப் பிடித்து விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக பெய்த மழை காரணமாக மூல வைகை மற்றும் முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 70 அடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும் ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கொண்டுள்ளது. ஆற்றில் அதிளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் செம்மண் கலந்த புதுவெள்ளத்தின் மணத்தினால் கவரப்பட்ட வைகைஅணையில் உள்ள மீன்கள் எதிர்நீச்சல் மூலம் ஆற்றுப்பகுதிக்கு வரத் தொடங்கி உள்ளன.
இவ்வாறு அரப்படித்தேவன்பட்டி, குன்னூர், கோட்டைப்பட்டி, பள்ளபட்டி பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு அதிகளவில் மீன்கள் இடம்பெயர்ந்துள்ளன. இவற்றைப் உள்ளூர் மக்கள் வலை, தூண்டில் மூலம் பிடித்து சொந்த பயன்பாட்டுக்கும், உள்ளூரில் இவற்றை விற்பனை செய்தும் வருகின்றனர்.
இது குறித்து முருகன் என்பவர் கூறுகையில்," விவசாயக் கூலி வேலைக்குச் செல்கிறோம். தற்போது கட்லா, ரோகு, ஜிலேபி கெண்டை உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் அணையில் இருந்து அதிகளவில் இடம்பெயர்ந்துள்ளன. இவற்றை பிடித்து விற்பனை செய்து வருகிறோம்" என்றார்.
ஆற்றின் வழிநெடுகிலும் ஆங்காங்கே உள்ள கிராமங்களில் பலரும் மீன்பிடிப்பதில் ஆர்வம் காட்டுவதால் உள்ளூர் மீன் விற்பனை களைகட்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT