Published : 06 Aug 2022 08:01 PM
Last Updated : 06 Aug 2022 08:01 PM
புதுச்சேரி: இந்திய தொல்லியல் துறையுடன் இணைந்து பண்டைய வாணிப நகரங்களை அடையாளம் காண பி.எஸ்.பாளையம் கோட்டைமேட்டில் சனிக்கிழமை (ஆக.6) தொடங்க இருந்த அகழாய்வு பணிக்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்தப் பணி நிறுத்தப்பட்டது.
புதுச்சேரி அரிக்கமேடு, பண்டைய காலத்தில் புகழ்பெற்ற வணிகத்தலமாக விளங்கியது தொல்லியல் அறிஞர்கள் மேற்கொண்ட அகழாய்வில் தெரிய வந்தது. இத்தகைய சிறப்புவாய்ந்த துறைமுகமாக விளங்கிய அரிக்கமேடு காலத்தோடு தொடர்புடைய உள்ளூர் வணிகதலங்களை கண்டறிந்து அகழாய்வு மேற்கொள்ள புதுச்சேரி அரசு திட்டமிட்டது.
தாகூர் அரசு கலைக் கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது புதுச்சேரி திருக்கனுார் அடுத்த பி.எஸ்.பாளையம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பம்பையாற்றின் ஓரத்தில் கி.பி. 1-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ரவுலட்டடு மண்பாண்டங்கள், உறைகிணறு, பழங்கால செங்கற்கள், பழங்கால பொருட்களின் சிதறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோட்டைமேட்டில் உள்ள பம்பையாற்று பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்களும் சமீபத்தில் அனுமதி வழங்கினர்.
இதையடுத்து, இந்திய தொல்லியல் துறையுடன் இணைந்து புதுச்சேரி அரசு மற்றும் தாகூர் அரசு கல்லூரி வரலாற்று துறை குழுவானது அகழாய்வு பணிகளை சனிக்கிழமை (ஆக.6) தொடங்கி வரும் செப்டம்பர் 30 -க்குள் நிறைவு செய்ய திட்டமிட்டிருந்தது.
இதன் மூலம் புதுச்சேரியின் பழங்கால நகரங்களின் பெருமையும், புதையுண்டு கிடக்கும் அக்கால மக்களின் சிறப்பும், பண்டைய காலத்தில் பயன்படுத்திய கட்டிடக்கலையும் அறிய முடியும் எனவும் அக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், அகழாய்வு பணிகளைத் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் தொடக்க நிகழ்ச்சியில் 3 அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்க இருந்தனர். அகழாய்வு பணிகளை மேற்கொள்ள தாகூர் கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் கல்லூரி மாணவர்கள் முன்கூட்டியே பி.எஸ்.பாளையம் வந்திருந்தனர்.
இதனை அறிந்த புதுச்சேரி மற்றும் தமிழக விவசாயிகள், பொதுமக்கள், அரசு முடிவு எடுக்கும் முன்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை. அகழாய்வு செய்ய நிலத்தின் உரிமையாளர்களிடம் அனுமதி வாங்கவில்லை. எந்த தகவலும் இல்லாமல் எங்கள் பகுதிக்குள் வருவதை ஏற்க மாட்டோம். அகழாய்வு செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறி எதிர்ப்பு தெரித்தனர்.பேராசிரியர்களிடம் வாக்குவாதம் செய்து, அகழாய்வு பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: ‘‘பி.எஸ்.பாளையம் கோட்டைமேடு பகுதியில் புதுச்சேரி மற்றும் தமிழக விவசாய நிலங்கள் இருக்கின்றன. இங்கு அகழாய்வு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகள் யாரும் எங்களிடம் எந்தவித கருத்தையும், ஆலோசனையும் கேட்கவில்லை.
திடீரென இன்று வந்து அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப் போவதாக கூறுகின்றனர். அகழாய்வு பணிகள் மேற்கொண்டால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். எனவே அதிகாரிகள் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அழைத்து கருத்து கேட்ட பிறகு அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்’’என்றனர்.
தாகூர் கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறும்போது, ‘‘அரிக்கமேடு வணிக துறைமுகத்துடன் தொடர்புடைய கோட்டைமேடு பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறை மூலம் தற்போது அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதற்காக அப்பகுதியில் உள்ள 3 மீட்டர் அகலமும், 4 மீட்டர் நீளமும் கொண்ட நிலத்தில் அகழ்வாய்வு பணி இன்று மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், விவசாயிகள் தங்களிடம் எந்தவித கருத்தும் கேட்காமல், அனுமதி பெறாமல் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அகழாய்வு பணி தொடங்குவது தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் கிராம விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் கருத்து கேட்டு அகழாய்வு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.
இதையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் திருக்கனூர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அகழாய்வு பணிகளை நிறுத்திவிட்டு கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT