Published : 06 Aug 2022 01:38 PM
Last Updated : 06 Aug 2022 01:38 PM

தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு நல்லக்கண்ணு தேர்வு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும், கழித்தவரும், ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டுவருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவிற்கு 2022-ம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

“தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.நல்லகண்ணுவிற்கு பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x