Published : 06 Aug 2022 01:26 PM
Last Updated : 06 Aug 2022 01:26 PM
அரியலூர்: தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவது தொடர்வதால், அரசு கண்காணிப்புக் குழுவை அமைத்து, 3 மாதங்களுக்கு ஒருமுறை தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
அரியலூர் மாவட்டம் அங்கனூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சனாதன சக்திகளும், கார்ப்பரேட்களும் இணைந்து நடத்துகிற அரசாக பாஜக அரசு உள்ளது. இதைக் கண்காணித்து வரும் நாட்டு மக்கள் உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்.
75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், வீட்டுக்கு வீடு தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பாஜக கூறியிருப்பதில் கார்ப்பரேட் அனுசரணை இருப்பது தெரியவருகிறது.
தேசியக் கொடிகளை பாலிஸ்டர் துணிகளில் தைப்பதற்கான ஒப்பந்தம் கார்ப்பரேட் நபருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அவற்றை இந்தியஅளவில் விற்றுத் தீர்த்தாக வேண்டிய தேவை இருக்கிறது.
பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசத்தை இழிவு செய்து மத்திய நிதியமைச்சர் பேசுவது, அண்டை நாடுகளுடன் உள்ள நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. இதில், அரசுகூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்து, தனியார் பள்ளிகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.
2ஜி அலைக்கற்றையை ஏலம் விட்டபோது, கற்பனையான கணக்கைச் சொல்லி குற்றம்சாட்டினர்.
தற்போது 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பல லட்சம் கோடி ரூபாய், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இதை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மத்திய அரசில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.
8 வழிச் சாலை அமைப்பதில் திமுக அரசுக்கு உடன்பாடு இருக்காது என்பதால், அந்தச் சாலை வராது என நம்புகிறேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT