Published : 06 Aug 2022 01:15 PM
Last Updated : 06 Aug 2022 01:15 PM
தென்காசி/திருநெல்வேலி: தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் அருவிகளில் 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தென்காசி மாவட்டத்தில் பகுதிகளில் மழை பெய்தது.
நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
நேற்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில் கடனாநதி அணையில் 50 மிமீ, குண்டாறு அணையில் 41, அடவிநயினார் அணையில் 33, ராமநதி அணையில் 20, கருப்பாநதி அணையில் 13, செங்கோட்டையில் 9, தென்காசியில் 8.50, ஆய்க்குடியில் 8, சிவகிரியில் 4 மற்றும் சங்கரன்கோவிலில் 2 மி.மீ. மழை பதிவானது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 83 அடியாக இருந்தது. பாதுகாப்பு கருதி அணை நீர்மட்டம் 83 அடியில் நிலைநிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.
84 அடி உயரம் உள்ள ராமநதி அணையில் நீர்மட்டம் 82 அடியில் நிலைநிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 56.11 அடியாக இருந்தது. 133.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 112.75 அடியாக இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. மற்ற அணைகளும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சாரல் விழா நேற்று தொடங்கிய நிலையில் குற்றாலம் அருவிகளில் குளிக்க முடியாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பாபநாசம் அணை
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீடிக்கும் மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் அணைப்பகுதி களிலும் பிற இடங்களிலும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 8, சேர்வலாறு- 3, மணிமுத்தாறு- 3, கொடுமுடியாறு- 6, அம்பாசமுத்திரம்- 4, சேரன்மகாதேவி- 1.6, ராதாபுரம்- 5.4, நாங்குநேரி- 11, களக்காடு- 0.4.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 84 அடியாக இருந்த நிலையில் நேற்று காலையில் 7 அடி உயர்ந்து 91.60 அடியாக இருந்தது. அணைக்கு 6,921 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,004 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 11 அடி உயர்ந்து 128.84 அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.90 அடியாக இருந்தது. அணைக்கு 601 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 55 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT