Published : 06 Aug 2022 12:26 PM
Last Updated : 06 Aug 2022 12:26 PM
சென்னை: கருமுட்டை விற்பனை விவகாரத்தில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் சீல் வைக்க தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்தும், ஸ்கேன் மையங்களுக்கு ‘சீல்’ வைத்து தமிக சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தனி நீதிபதி, மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, விதிமீறல் இருப்பது உறுதி செய்தால் மட்டுமே மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்ய முடியும் எனவும், பதிவை சஸ்பெண்ட் செய்வதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி, தமிழக அரசின் உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சுகாதாரத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக சம்பந்தபட்ட தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் சீல் வைக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவின்படி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சார்பில் அந்த தனியார் மருத்துவமனைகளுக்கு மீண்டும் சீல் வைக்க உரிய வழிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT