Published : 06 Aug 2022 11:46 AM
Last Updated : 06 Aug 2022 11:46 AM

மழை பாதிப்பு: நள்ளிரவில் அவரச கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை: மழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் நள்ளிரவில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுடன் தொலைபேசியில் உரையாடினார்.

கனமழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முனனெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், இம்மாவட்டங்களுக்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர்களையும் கண்காணிப்பு அலுவலர்களையும் அறிவுறுத்தியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று (ஆகஸ்ட் 5) இரவு 11 மணிக்கு சென்னை எழிலகம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வளாகத்திலுள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த முதல்வர், வெள்ள நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர் வெள்ள நிலைமை குறித்தும், மழை விபரம் குறித்தும், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்கள், நிலை நிறுத்தப்பட்டுள்ள மீட்புப் படைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் முதல்வருக்கு எடுத்துக் கூறினார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் வகையில் திருச்சி மாவட்டத்தில் 2 குழுக்களும், நாமக்கல் மாவட்டத்தில் 1 குழுவும், ஆக மொத்தம் 66 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். திருச்சி, ஈரோடு, நாமக்கல், ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 118 வீரர்களைக் கொண்ட 3 குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ள விபரங்களை முதல்வர் கேட்டறிந்தார்.

மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக கொண்டு வந்து 49 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 10 மாவட்டங்களில் உள்ள இந்த 49 முகாம்களில் 1327 குடும்பங்களைச் சேர்ந்த 4035 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், கந்தன் பட்டறை நிவாரண முகாம், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் வட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி திருமண மண்டபம் நிவாரண முகாம் மற்றும் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், மகாராஜா மண்டபம், பிச்சாண்டார் கோயில் நிவாரண முகாம் ஆகிய நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசி, அவர்களுக்கு அங்கு போதுமான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தார்.

மேலும், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து கேட்டறிந்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x