Published : 06 Aug 2022 10:21 AM
Last Updated : 06 Aug 2022 10:21 AM
சென்னை: "ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பாக தமிழக அரசு மேலும் ஒரு வார காலம் அவகாசம் அளிக்குமாறு அதிமுக சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஆண்டுதோறும் தொடக்க கல்வி ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவியர் இந்தப் பயிற்சியில் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாக 04.07.2022 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க மாணவ, மாணவியருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் பயிலும் மாணவ மாணவியர் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட ஆசிரியர் பள்ளி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் உதவியுடன் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டது. இந்தப் பயிற்சியில் சேர ஏராளமான கிராமப்புற மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் இணையதளம் வழியாக விண்ணப்பித்தனர்.
இருப்பினும் மேற்குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும்பாலான மாணவ, மாணவியர் விண்ணப்பிக்காத சூழ்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 13.07.2022 வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.
இந்த நீட்டிப்பிற்குப் பிறகும் பெரும்பாலான இடங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டதாகவும், இதற்கு காரணம் பிணைய இணைப்பு அதாவது Network Connection சரியாக இல்லாததுதான் என்றும், மேலும் ஒரு வார காலம் அவகாசம் அளிக்கும்பட்சத்தில் அனைத்து மாணவ, மாணவியரும் விண்ணப்பிக்க ஏதுவாக இருக்குமென்றும் இந்த பயிற்சியை ஆர்வமுடன் பயில உள்ள மாணவ மாணவியரும் அவர்களது பெற்றோர்களும் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களுடைய கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த நியாயமான கோரிக்கையினை பரிசீலிக்க வேண்டிய கடமை தமிழக அரசாங்கத்திற்கு உள்ளது.
எனவே தமிழக முதல்வர் மேற்படி கோரிக்கையில் உள்ள நியாயத்தை கருத்தில் கொண்டு, ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பாக ஒரு வார காலம் அவகாசம் அளிக்குமாறு அதிமுக சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT