Published : 06 Aug 2022 07:10 AM
Last Updated : 06 Aug 2022 07:10 AM

கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு: 250 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, அரிய லூர் மாவட்டம் அரங்கோட்டை கிராமத்தில் கொள்ளிடக் கரையைத் தாண்டி, வயல்களுக்குள் புகுந்து, அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்களை மூழ்கடித்துள்ள தண்ணீர்.

அரியலூர்: கொள்ளிடத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாகதா.பழூர் பகுதியில் அறுவடைக்குதயாராக இருந்த 250 ஏக்கர்நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் செல்கிறது.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரங்கோட்டை கிராமத்தில் தாழ்வாக உள்ள கொள்ளிடக் கரையைத் தாண்டி, அப்பகுதியில் உள்ள வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், அரங்கோட்டை, கோவிந்தபுத்தூர், அனைக்குடி உள்ளிட்ட கிராமங்களில் 250 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இதுகுறித்து அரங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிராஜேந்திரன் கூறியதாவது: இப்பகுதியில் கடந்த சித்திரை மாதத்தில் நெல் நடவு செய்தோம். சித்திரை கார் பருவ நடவான இப்பயிர்கள், ஆடி மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.

அதன்படி, அடுத்த வாரத்தில் இப்பயிர்கள் அனைத்தும் அறுவடையாகும் நிலையில் இருந்தன. இந்த அறுவடைக்குப் பிறகு விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரங்கோட்டை பகுதியில் உள்ள கொள்ளிடக் கரையைத் தாண்டி, வயல் பகுதிக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

ஆற்றில் தண்ணீர் குறைந்தால், இப்பகுதியில் உள்ள தண்ணீர் வடிய 3 அல்லது 4 நாட்கள் ஆகும். அதேநேரம், தற்போது ஆற்றில் அதிக தண்ணீர் செல்வதால், வயல்களில் உள்ள தண்ணீர் வடிய வாய்ப்பே இல்லை.

எனவே, அரங்கோட்டை, அனைக்குடி, கோவிந்தபுத்தூர் உள்ளிட்ட கிராமங்களில், 250ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடையும் நிலையில் உள்ளன. இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே, இதற்கு உரியஇழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே, தண்ணீர் சூழ்ந்தவிளைநிலங்களை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் தர் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அப்போது, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனகோரிக்கை விடுத்த விவசாயிகளிடம், “மாவட்ட நிர்வாகம் பாதிப்புகுறித்து கணக்கெடுக்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x