Published : 05 Aug 2022 09:12 PM
Last Updated : 05 Aug 2022 09:12 PM

கள்ளக்குறிச்சி விசாரணையை பாதிக்கத்தக்க பதிவு, வீடியோ வெளியிடுவோர் மீது நடவடிக்கை: சிபிசிஐடி

சின்னச்சேலம் தனியார் பள்ளியில் தடயங்களைச் சேகரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீஸார் | கோப்புப் படம்

சென்னை: சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி இறந்தது தொடர்பாக இணைய ஊடகங்களில் புலன்விசாரணையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்பட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுடைய வளைதள கணக்குகள், யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் என்று குற்றப்புலனாய்வு துறை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் 17 வயது பள்ளி மாணவி இறந்தது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு புலன்விசாரணையில் உள்ளது. விழுப்புரம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையினர் மேற்படி வழக்கில் புலன்விசாரணை மேற்கொண்டு, மாணவியின் இறப்பு சம்பந்தமாக அனைத்து கோணங்களிலும் புலன் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன்விசாரணை நடைபெற்று வருகின்றது. இவ்வழக்கின் புலன்விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகின்றது.

சமூக ஊடகங்கள், பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள் இது சம்பந்தமாக அவர்களது சொந்தக் கருத்துகளையும், அறிக்கைகளையும் காணொளி காட்சிகள் வாயிலாக வெளியிட்டும், மாணவியின் இறப்பு சம்பந்தமாக இணையான புலன்விசாரணை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் புலன்விசாரணையை பாதிக்கும் வகையில் அமைகின்றது.

இத்தகைய சூழ்நிலையில், புலன்விசாரணையின் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் எந்தவிதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாமென்று அனைவரும் வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

மேலும், இது தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கும், நியாயமான புலன்விசாரணை மேற்கொள்ளவும் அனைவரும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன்விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்களுடைய வலைதள கணக்குகள் மற்றும் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வழக்கு தொடர்பாக யாருக்கேனும் உரிய தகவல் கிடைத்தால் அதனை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் உயர் அதிகாரியின் அலைப்பேசி எண் 9003848126-க்கு நேரடியாக பகிரும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x