Published : 05 Aug 2022 04:05 PM
Last Updated : 05 Aug 2022 04:05 PM
சென்னை: மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்டறிவதற்காக காலை, மாலை ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் பருவநிலை மாற்ற துறையும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதன்படி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். ஆனால், கடற்கரையில் உள்ள கடைகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தடுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், பிளாஸ்டிக் இல்லா கடற்கரைப் பகுதிகளாக பராமரிக்கும் வகையில் இன்று (ஆகஸ்ட் 5) முதல் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அமல்படுத்த சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இரு வேளைகளில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதிகப்பட்ச அபராதமும் விதிக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதன்படி மெரினா கடற்கரையில் இன்று (ஆகஸ்ட் 5) காலை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 68 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 18 கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.1,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 27ம் தேதி முதல் 2ம் தேதி மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 6,478 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 2,548 உரிமையாளர்களிடமிருந்து 1,861 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.9,17,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT