Last Updated : 05 Aug, 2022 02:57 PM

4  

Published : 05 Aug 2022 02:57 PM
Last Updated : 05 Aug 2022 02:57 PM

“சாவர்க்கரை பற்றி ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?” - ஆளுநர் தமிழிசைக்கு நாராயணசாமி சவால்

சாவர்க்கர் சிலை | கோப்புப் படம்

புதுச்சேரி: "சாவர்க்கரை பற்றி ஒரே மேடையில் விவாதம் நடத்த ஆளுநர் தமிழிசை தயாரா?" என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.

மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதன்படி, புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்திற்காக மிஷன் வீதியில் உள்ள ஜென்மராகினி மாதா பேராலயம் அருகே நூற்றுக்கணக்கான காங்கிரஸார் இன்று திரண்டனர். அங்கிருந்து காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு பதாகைகளுடன் காங்கிரஸார் ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றிகையிட பேரணியாக வந்தனர். அவர்களை ஆம்பூர் சாலை சந்திப்பில் தடுப்புகள் வைத்து போலீஸார் தடுத்தனர்.

இதையடுத்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி உட்பட அனைவரும் தடுப்புகள் மீது ஏறி நின்று மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும், காங்கிரஸார் தடுப்புகளைத் தாண்டி சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, எஸ்.பி வம்சித ரெட்டி தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்எல்ஏ உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதையெல்லாம் எடுத்து கேட்டால் மோடி அரசு அமலாக்கத் துறை மூலம் அரசியல் கட்சி தலைவர்களை திட்டமிட்டு பழிவாங்குகிறது. நாட்டில் ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தில் மோடிக்கு நம்பிக்கை கிடையாது. அவர் ஓர் அராஜக ஆட்சியை நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறார்.

மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறார். நாட்டு மக்கள் கொதித்து எழுவார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து மோடியை விரைவில் வீழ்த்துவார்கள்.

சார்க்கார் சிறையில் இருந்ததால் அவரை தியாகி என்று ஆளுநர் கூறுவது விந்தையாக இருக்கிறது. சுதந்திர போராட்ட சமயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு விசுவாசியாக இருப்பேன், சட்டத் திட்டங்களுக்கு கட்டப்பட்டு இருப்பேன் என்று கடிதம் எழுதினார்.

வெள்ளைக்காரர்களிடம் அடிமையாக இருந்தவரை தியாகியாக நான் ஏற்க மாட்டேன். ஒரே மேடையில் சாவர்க்கரை பற்றி விவாதம் நடத்த ஆளுநர் தமிழிசை தயாரா? என்னை பொறுத்தவரை வீர் சாவர்க்கர் ஒரு கோழை சாவர்க்கர்தான்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x