Published : 05 Aug 2022 09:00 AM
Last Updated : 05 Aug 2022 09:00 AM
‘5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து பேச ஆ.ராசாவுக்கு தகுதி இல்லை. முறைகேடு குறித்து ஆதாரம் இருந்தால் நிரூபிக்கலாம்’ என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டிலேயே திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சினையில் பாஜக தலையிடாது. குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கேட்பதற்காகவே சட்டப்பேரவை கட்சி தலைவர் நயினார் நாகேந்திரனும் நானும் அதிமுக எம்எல்ஏக் கள் கூட்டத்தில் பங்கேற்றோம்.
கடவுளை நிந்தனை செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகவே பாஜகவின் நிலைப்பாடு இருக்கும். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். கூட்டணி குறித்து தேசியக் குழுதான் முடிவு செய்யவேண்டும்.
அமலாக்கத் துறையை பாஜக பயன்படுத்துவதாக கூறுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்ததாக அறிக்கை விடும் ஆ.ராசா, ஆதாரம் இருந்தால் நிரூபிக்கட்டும். இதுகுறித்து பேச அவருக்கு தகுதி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT