Published : 05 Aug 2022 05:17 AM
Last Updated : 05 Aug 2022 05:17 AM
சென்னை: வசதி படைத்தவர்கள், விஐபிக்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்களா என்பதை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கள அலுவலர்களுக்கு உணவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த 2-ம் தேதி உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், உணவுப்பொருள் வழங்கல்துறை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர்,மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதில், வசதி படைத்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குகிறார்களா என்பதை விசாரணை செய்து கள அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பொருட்களின் தரம் மற்றும் எடை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கடை விற்பனையாளர்களிடம் முறைகேடு கண்டறியப்படும்போது, தொகையை திரும்ப செலுத்தினாலும் அவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை அரசு மருத்துவமனைகள் மூலமே மேற்கொள்ள வேண்டும்.
கடைகளுக்கு வெள்ளை அடித்தல், மின் சாதனங்கள் பழுது, தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் சிறிய பழுது ஆகியவற்றை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊட்டி டீ, அரசு உப்பு, காதி பொருட்கள், பனை வெல்லம் ஆகியவற்றை அந்தந்த மாதமே கொள்முதல் செய்து விற்க நடவடிக்கை எடுப்பதுடன், மாதாமாதம் விற்பனையை அதிகரிக்க வேண்டும்.
மழைக்காலங்களில் மூட்டைகளை தரையில் வைக்காமல், மரப்பலகையிலான கட்டைகளைப் பயன்படுத்தி அதன் மேல் வைக்கவேண்டும். 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரிப்பதற்கான முன்மொழிவை அனுப்பி வைக்க வேண்டும்.
உணவு கடத்தலில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கடும் தண்டனை வழங்க வேண்டும். இணையவழி பிரச்சினைகள், விற்பனை முனைய இயந்திரப் பழுது தொடர்பாக, உரிய பதிவேட்டில் பதிவு செய்து, உடன் பழுது நீக்கம் செய்ய வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்கள் பெற வரும் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து பொருட்கள் வழங்க வேண்டும்.
சிறப்பாகப் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு இந்தாண்டுக்கு ஆக.15-க்குள் பரிசுகள் வழங்கப்பட வேண்டும். விற்பனையாளர்களுக்கான நிதிப்பயன்கள் உடனடி யாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT