Published : 05 Aug 2022 04:05 AM
Last Updated : 05 Aug 2022 04:05 AM
கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியதால், அமராவதி, ஆழியாறு அணைகளில் இருந்து நேற்று உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதிஅணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முழு கொள்ளளவான 90 அடியை நீர்மட்டம் எட்டியதை தொடர்ந்து, நேற்றுகாலை ஷட்டர்கள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு 10,600 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர். இதையடுத்து, அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்வினீத் கூறும் போது, “அமராவதி ஆற்றின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஒலி பெருக்கிமூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
திருப்பூர் மாநகரில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்ததால், மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
கனமழை காரணமாக பொள்ளாச்சி அருகேயுள்ள 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து,நீர்மட்டம் 115 அடியாக உயர்ந்தது. நேற்று காலை 5 மணியளவில் மேல் ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு அணைக்கு 1800 கனஅடி நீர் திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, 11 மதகுகள் வழியாக 750 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் ஆழியாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாலை 5 மணி நிலவரப்படிஆழியாறு அணைக்கு 4332 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில்இருந்து 4332 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றுக்கு செல்லக்கூடாது என ஒலிபெருக்கி மூலம் வருவாய்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில், ஆழியாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு முதியவர் உயிரிழந்தார். ஆனைமலை அடுத்தவாழைக்கொம்பு நாகூரை சேர்ந்த விவசாயி சுந்தரசாமி (70) நேற்று மதியம் காளியப்ப கவுண்டன் புதூருக்கு செல்ல ஆழியாற்று தரைப்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, வெள்ளத்தில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் ஆற்றில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் இயலாமல் போனது. அவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார்.
ஆனைமலை போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து, சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பூச்சநாரி பகுதியில் சுந்தரசாமியின் உடலை மீட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT