Published : 05 Aug 2022 04:25 AM
Last Updated : 05 Aug 2022 04:25 AM
ஈரோட்டில் நேற்று பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. காட்டாற்று வெள்ளம் காரணமாக மலைக் கிராமங்களுக்குச் செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாயாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றை கடக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், நேற்று காலை 8 மணி அளவில் ஈரோட்டில் சாரலாக தொடங்கிய மழை, கனமழையாக மாறி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் தேங்கியது. குடிநீர், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சேறும், சகதியுமாக மாறின. வஉசி மைதானத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டும் சேறும், சகதியுமாக மாறியது.
ஈரோடு-பெருந்துறை சாலை குமலன் குட்டை, ஆர்கேவி சாலை, வீரப்பன்சத்திரம், சத்தியமங்கலம் சாலை, பூங்கா சாலை, கோட்டை பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்படாததாலும், மழை நீர் வடிகால்கள் இல்லாததாலும், சாலைகளில் தேங்கிய நீர் வெளியேற முடியாத நிலை ஏற்படது. காலை நேரத்தில் பெய்த மழையால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல, கோபி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையால் பாதிப்பு ஏற்பட்டது. தாளவாடி மற்றும் ஆசனூர் சுற்று வட்டாரத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலை குளியாடா, தேவர் நத்தம், கோட்டாடை, மாவள்ளம், ஓசட்டி மலைக் கிராங்கள் மற்றும் வனப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேல் கனமழை பெய்தது.
அரேபாளையம் தரைப் பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தது. இதனால், ஆசனூரில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்லும் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதேபோல, ஆசனூர் ஓங்கல்வாடி சாலையில் உள்ள தரைப் பாலத்தையும் காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்ததால், அங்கும் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அரிகியம், மாக்கம் பாளையம், கோம்பை தொட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு செல்லும் பாதையில் உள்ள குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரைப் பள்ளத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
நீலகிரியில் தொடர்மழை பெய்ததால், மாயாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம், அல்லிமாயாறு ஆகிய வனக்கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மாயாற்றை வாகனங்கள் கடக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT