Published : 05 Aug 2022 06:03 AM
Last Updated : 05 Aug 2022 06:03 AM
சென்னை: பரந்தூரில் புதிதாக அமையவுள்ள விமானநிலையத்துடன், மெட்ரோ ரயில் போக்குவரத்தை இணைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பரிசீலிக்கிறது.
சென்னையில் இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் வரைஅமைக்கப்பட உள்ள வழித்தடத்தை,பெரும்புதூர் வரை நீடிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்துஆய்வு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், 29 கி.மீ. தொலைவில் உள்ள பரந்தூர் வரை மெட்ரோ ரயில் பாதையை நீட்டிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், பெரும்புதூர் அருகேயுள்ள பரந்தூரில் புதிய விமானநிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏறத்தாழ 4,700 ஏக்கர் பரப்பில் புதிய விமானநிலையம் அமைய உள்ளது. ஆண்டுக்கு 10 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய திறன் கொண்டதாக இந்த புதிய விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்தபின்பு, புதிய விமானநிலையத்துக்கான திட்ட மதிப்பு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்ட மதிப்பு ரூ.20,000 கோடியாகும்.
இந்த புதிய விமானநிலையம் சென்னையில் இருந்து 73 கி.மீ.தொலைவில் அமைய உள்ளது.எனவே, இந்த விமானநிலையத்துடன் மெட்ரோ ரயில் போக்குவரத்தை இணைக்கும் வகையில், மெட்ரோரயில் பாதையை நீட்டிப்பது தொடர்பான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னை விமானநிலையம்-விம்கோ நகர், பரங்கிமலை-சென்ட்ரல் ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,200 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இதில், கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் வரையிலான ஒரு வழித்தடம் அடங்கும். இந்த வழித்தடத்தை பெரும்புதூர் வரைநீடிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிதொடங்க உள்ளது. இத்துடன் புதிய விமானநிலையம் அமையவுள்ள பரந்தூர் வரையிலான சாத்தியக்கூறுகளும் ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கிடம் கேட்டபோது, “இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடத்தை பூந்தமல்லி பைபாஸில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
அதன்படி, பூந்தமல்லி பைபாஸ்- ஸ்ரீபெரும்புதூர் வரையிலான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிவிரைவில் தொடங்க உள்ளது. பெரும்புதூர் அருகே பரந்தூர் இருப்பதால், பரந்தூர் வரையிலான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT