Published : 05 Aug 2022 07:38 AM
Last Updated : 05 Aug 2022 07:38 AM
ஆவடி: சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே சேக்காடு பகுதியில் ‘எண் - 9’ லெவல் கிராசிங் கேட்டை மாற்றி, ரயில்வே சுரங்கப் பாலம் அமைக்க வேண்டும் என சேக்காடு மற்றும் கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன் விளைவாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேக்காடு பகுதியில் ரயில்வே சுரங்கப் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரயில்வே சுரங்கப் பாலம் அமைக்கும் பணி, கடந்த 2006-2007-ம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் சேக்காடு ரயில்வே சுரங்கப் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் ரூ.20.58 கோடி மதிப்பிலும், தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் சுமார் ரூ.9 கோடி மதிப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அப்பணி மெத்தனமாக நடைபெற்று வருகிறது. ஆகவே, அப்பணியை துரிதமாக முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் தெரிவித்ததாவது: சேக்காடு பகுதியில், இரு வழிப்பாதையுடன் கூடிய ரயில்வே சுரங்கப் பாலம் அமைக்கும் பணி கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
இதனால், சேக்காடு, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் பேர், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியாத சூழலில் உள்ளோம்.ஆகவே, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறை, சேக்காடு ரயில்வே சுரங்கப் பாலம் அமைக்கும் பணியை துரிதமாக முடிக்க வேண்டும் என்றனர்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சேக்காடு ரயில்வே சுரங்கப் பாலம் அமைக்கும் பணியில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியில் 80% பணிகள் முடிந்துள்ளன.
இணைப்பு சாலை, அணுகுசாலை உள்ளிட்ட 20% பணிகள் மட்டுமே உள்ளன. ரயில்வே மேற்கொள்ளும் பணி முடிவுக்கு வந்த உடன், மீதமுள்ள பணிகளும் முடிவுக்கு வரும். இரு துறையின் பணிகளும் வரும் டிசம்பருக்குள் முடிவுக்கு வந்து, சுரங்க பாலம் பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT