Published : 05 Aug 2022 04:30 AM
Last Updated : 05 Aug 2022 04:30 AM
காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்கள், மாயனூர் கதவணையில் ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், காவிரி கரையோரம் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது குறித்து தவுட்டுப்பாளையம் பகுதிகளில் நேற்று வீடு வீடாகச் சென்று ஆட்சியர் த.பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் எஸ்.பி ஏ.சுந்தரவதனமும் சென்றார்.
தொடர்ந்து, மாயனூர் கதவணை, செல்லாண்டியம்மன் கோயில், அம்மா பூங்கா ஆகிய பகுதிகளை பார்வையிட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்படுவதால், காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் 26 கிராமங்கள் அமைந்திருக்கின்றன. இப்பகுதிகள் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மேடானப் பகுதிகளில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தவுட்டுப்பாளையத்தில் வசிக்கும் 150-க்கும் அதிகமான குடும்பங்கள் அருகில் உள்ள திருமண மண்டபம், சமுதாயக்கூடம், பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
மாயனூர் கதவணையில் தற்சமயம் விநாடிக்கு 1.60 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது இரவு 2 லட்சம் கன அடிக்கு மேலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கதவணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, நீந்துவதற்கோ அல்லது வேறு எந்த ஒரு காரணத்துக்காகவோ ஆற்றுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், கோட்டாட்சியர்கள் கரூர் ரூபினா, குளித்தலை புஷ்பாதேவி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சங்கொலி
மாயனூர் கதவணை பாலத்தில் வேடிக்கைப் பார்ப்பதற்காக அதிகளவில் வந்திருந்த மக்கள், செல்போனில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றில் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்ததால், பொதுமக்களை எச்சரிக்கும் விதமாக அடிக்கடி சங்கொலி எழுப்பப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT