Published : 04 Aug 2022 06:48 PM
Last Updated : 04 Aug 2022 06:48 PM
சென்னை: “கனல் கண்ணன் பேசியிருப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரான வன்முறை பேச்சு, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான பேச்சு, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கிற பேச்சு” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்து முன்னணியைச் சார்ந்த கனல் கண்ணன் என்பவர் ஸ்ரீரங்கம் ரெங்கனாதர் கோயிலுக்கு முன்பாகவுள்ள தந்தை பெரியார் சிலையை அகற்ற வேண்டும், அதை என்றைக்கு இடித்துத் தள்ளுகிறோமோ, அன்றைக்குத் தான் இந்துக்களுக்கான எழுச்சி ஏற்படும் என்று பேசியிருக்கிறார். இது மிகுந்த வன்முறையான ஒரு பேச்சு. இந்திய அரசியல் சட்டத்தில் எல்லா கருத்துகளுக்கும் இடமுண்டு. கடவுள் மறுப்பும் உண்டு, கடவுள் ஆதரவும் உண்டு. எந்த கருத்தையும் ஜனநாயகத்தில் பேச உரிமையுண்டு. இவை தான் இந்திய ஜனநாயகத்தின் மாண்பு.
தந்தை பெரியார் அவருடைய கருத்தை கூறியிருக்கிறார். ராமானுஜரும் அவருடைய கருத்தைச் கூறியிருக்கிறார். ராமானுஜரும் இருக்க வேண்டும், பெரியாரும் இருக்க வேண்டும். அது தான் இந்திய ஜனநாயகம். நான் இவர்களை கேட்கிறேன். இந்திய விடுதலைக்கு துரோகம் இழைத்தவர் சாவர்க்கர். மகாத்மா காந்தியைக் கொன்ற வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர். ஆனால், பாரதிய ஜனதா ஆட்சியில் அவருடைய படத்தை நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வைத்தார்கள். காலமெல்லாம் சுதந்திரத்திற்காக உழைத்து, கல்லுடைத்து, செக்கிழுத்து, தங்கள் இளமைக்காலங்களை சிறைக் கம்பிகளுக்குள்ளே செலவிட்டு, வாழ்க்கையைத் தொலைத்த லட்சக்கணக்கான தேசியவாதிகளால் தான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது.
ஆனால், அந்தமான் சிறையிலிருந்த போது, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தவர் சாவர்க்கர். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மகாத்மா காந்திக்கும் படம் இருக்கிறது, சாவர்க்கருக்கும் படம் இருக்கிறது. சாவர்க்கர் படம் வைத்ததை காங்கிரஸ் கட்சி சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொண்டது. இந்தியாவின் இறையாண்மையையும், ஜனநாயகத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.
கனல் கண்ணன் பேசியிருப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரான வன்முறை பேச்சு, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான பேச்சு, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கிற பேச்சு. ஜெர்மனியில் ஹிட்லர் என்ன பேசினாரோ, இத்தாலியில் முசோலினி என்ன பேசினாரோ, அதையே இந்தியாவில் இவர்கள் பேசி வருகிறார்கள். இத்தகைய வன்முறை பேச்சை ஆதரிக்கிற வகையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குதர்க்கவாதம் பேசுவது கடுமையான கண்டனத்திற்குரியது. இத்தகைய சக்திகளை ஆதரிப்பதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்து விடலாம் என்று அண்ணாமலை கனவு காண்கிறார். பெரியார், காமராஜர் பிறந்த மண்ணில் அண்ணாமலையின் கனவு பலிக்காது.
அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்ற வேண்டாம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் பெருமை. அதைத் தமிழகத்தில் சீர்குலைக்க வேண்டாம்.
பெரியார் சிலையை அகற்றச் சொன்னால் ஒருவர் ராமானுஜர் சிலையை அகற்றச் சொல்வார். எனவே, இதெல்லாம் தவறான பாதைக்கு இட்டுச்செல்லும். அதைத் தான் வட இந்தியாவில் செய்தார்கள். மசூதியை இடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். ரத்தக்களறி வந்தது. அது, அது இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் கருத்து.
எனவே, தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கிற வகையில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய கனல் கண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதற்காக தமிழக அரசை பாராட்டுகிறேன். இத்தகைய சீர்குலைவு சக்திகளை தமிழகத்தில் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.''
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT