Published : 04 Aug 2022 08:06 PM
Last Updated : 04 Aug 2022 08:06 PM

சென்னையில் குட்டையுடனான மழைநீர் சேகரிப்பு வசதியுடன் விரைவில் ‘ஸ்பாஞ்ச்’ பூங்காக்கள் - என்ன ஸ்பெஷல்?

சென்னை: குட்டையுடன் சேர்ந்த மழைநீர் சேகரிப்பு வசதிகளுடன் "ஸ்பாஞ்ச்" பூங்காக்களை சென்னை மாநகராட்சி விரைவில் அமைக்கவுள்ளது. இதன் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

சென்னையில் புதிதாக சோழிங்கநல்லுார், அம்பத்துார், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் போதிய நகர கட்டமைப்பு இல்லாத நிலை உள்ளது. இந்தப் பகுதிகளில் இணைக்கப்பட்ட பகுதிகளில் போதியளவில் விளையாட்டு அரங்கம், பூங்காக்கள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பவில்லை. அதேநேரம், மாநகராட்சிக்கு சொந்தமான திறந்தவெளி காலி இடங்கள் அதிகளவில் உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு அவற்றில் புது முயற்சியாக மழைநீர் சேகரிப்புடன் கூடிய 'ஸ்பாஞ்ச்' பூங்காக்களை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பொது தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில், "சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை மாநகராட்சி செய்து வருகிறது. அதன்படி, 126 திறந்தவெளி இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதில், சுற்றுசுவர் அமைக்கப்பட்டு, சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்படும். மேலும், மழைநீர் வடிகால் இணைப்புடன் கூடிய குட்டை அமைக்கப்படும். இந்தக் குட்டையின் அடிப்பகுதி, நீரை பூமிக்குள் உறிஞ்சும் தன்மையில் அமைக்கப்படும்.

மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கும் பட்சத்தில், மழைநீர் வடிகால் வாயிலாக, குட்டைக்குள் நீர் கொண்டு வரப்படும். குட்டை நிரம்பும் பட்சத்தில், அவை வெளியேற்றும் கால்வாய் வாயிலாக, அருகாமையில் உள்ள குட்டை அல்லது குளம் ஆகிய பகுதிகளுக்கு நீர் கொண்டு செல்லப்படும். இதன்வாயிலாக, குடியிருப்பு பகுதிகளில் நீர் தேக்கத்தை தடுக்க முடியும்.

இந்த 126 பூங்காக்களில் முதற்கட்டமாக 50 பூங்காக்களில், குட்டையுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 50 கோடி ரூபாய் தமிழக அரசு தருகிறது. இத்திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்தப்பின், செயல்படுத்தப்படும். இந்த புதிய முயற்சி மக்களிடையே வரவேற்பை பெறுவதை அடுத்து, மற்ற இட வசதி உள்ள பூங்காக்களில் விரிவுப்படுத்தப்படும்.

அதேபோல், குடிசை மாற்றுப் பகுதிகளில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், எட்டு இடங்களில் 50 கோடி ரூபாய் செலவில், விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கத்தின் வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வசதி ஏற்படுத்தப்படும். தமிழக அரசின் ஒப்புதல் பெற்று விரைவில் பணிகள் துவங்கப்படும்" என்று அவர் கூறினார்.

"ஸ்பாஞ்ச்" என்றால் என்ன?

  • பஞ்சு போன்று எவ்வளவு தண்ணீரையும் உறிஞ்சும் அமைப்புக்குதான் "ஸ்பாஞ்ச்" என்று பெயர்.
  • இதில் எந்த வித சிமெண்ட் கட்டுமானங்களும் இருக்காது.
  • பூங்கா முழுவதும் மரங்கள் இருக்கும், எல்லாம் பூங்காவிலும் மழை நீர் சேகரிப்பு வசதி இருக்கும்
  • மேலும் தண்ணீரை உறிஞ்சும் வகையில் செயற்கை குட்டைகள் இருக்கும்.
  • இந்த மழை நீர் தேங்காத வண்ணம் உறிஞ்சி நிலத்திற்குள் அல்லது அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x