Published : 04 Aug 2022 06:17 PM
Last Updated : 04 Aug 2022 06:17 PM
புதுடெல்லி: ''அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளுக்கு வானொலி நிகழ்ச்சி தெளிவாக கிடைக்கும்படி தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்'' என்று டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை நேரில் சந்தித்து திமுக எம்.பி செந்தில்குமார் கோரிக்கை விடுத்தார்.
மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகனை, திமுகவின் எம்.பி. செந்தில்குமார் இன்று சந்தித்தார். தருமபுரி அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் தெளிவாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரினார்.
இது குறித்து தருமபுரி மக்களவை தொகுதி எம்.பியான செந்தில்குமார், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: 'தருமபுரி, கிருஷ்ணகிரி திருப்பூர் மற்றும் சேலம் மாவட்ட மக்களின் முக்கியத் தகவல் ஆதாரமாக தருமபுரி அகில இந்திய வானொலி ஒலிபரப்பு சேவை உள்ளது.
இதன்மூலம், உள்ளூர் விவசாயிகள், நாட்டுப்புற கலைஞர்கள், பொதுமக்கள் பெரிதும் பயன் பெற்று வருகின்றனர். கரோனா காலத்தில் அரசின் விழிப்புணர்வு உள்ளிட்டவை மக்களிடம் சென்று சேர இந்த வானொலி முக்கிய பங்காற்றியது. 2019ஆம் ஆண்டு என் தொடர் முயற்சியால் தருமபுரி வானொலி நிலையம் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மாலை ஒலிபரப்பை தொடங்கியது. தற்போது தருமபுரி நிலையத்திலிருந்து நிகழ்ச்சிகளை சொந்தமாக தயாரித்து, முழு நேரமாக செயல்பட்டு வருகிறது.
தருமபுரி அகில இந்திய வானொலி நிலையம் கடந்த ஆண்டில் 60 லட்சம் வரை வருவாய் ஈட்டி பல நகர்ப்புற வானொலி நிலையங்களை விட கூடுதலாக வருவாய் பெற்றுள்ளது. ஆனால் தருமபுரி வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு நேரத்தை 4 மணி நேரமாக குறைக்க அறிவுறுத்தியதாக என் கவனத்திற்கு வந்தது. இது மிகவும் தன்னிச்சையானது. பொது சேவை ஒளிபரப்பின் கட்டளைக்கு எதிரானது. 2021ல் மத்திய அமைச்சருக்கு தருமபுரி அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு தரத்தை மேம்படுத்த கடிதம் எழுதி இருந்தேன்.
அதன்படி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளுக்கு வானொலி நிகழ்ச்சி தெளிவாக கிடைக்கும்படி தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், தற்போது உள்ள நிலையை தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்" என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT