Published : 04 Aug 2022 04:31 PM
Last Updated : 04 Aug 2022 04:31 PM
சென்னை: வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசிக்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிடுவதாக வருமான வரித் துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-97 மதிப்பீட்டு ஆண்டிற்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலாவிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு 2001-ம் ஆண்டு சசிகலாவின் அதிகாரம் பெற்ற நபர் பதில் அளித்திருந்தார்.
அந்த விளக்கத்தில் குறிப்பிட்டிருந்த தகவலின் அடிப்படையில், 1996-97ம் மதிப்பீட்டு ஆண்டில் சசிகலாவின் சொத்து மதிப்பு 4 கோடியே 97 லட்சத்து 52 ஆயிரத்து 100 ரூபாய் என தீர்மானித்த வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரி, செல்வ வரியாக 10 லட்சத்து 13 ஆயிரத்து 271 ரூபாயை செலுத்த சசிகலாவிற்கு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஏற்றுக் கொண்ட வருமான வரித் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சட்டத்திற்குட்பட்டு மீண்டும் மதிப்பீடு செய்யவும், 40 லட்ச ரூபாய் கடனை கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ளவும் மதிப்பீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறை ஆணையர் தரப்பில் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது.
நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில், "வருமான வரித் துறையில் ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய வழக்குகளை கைவிடுவது என மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் சசிகலா மற்றும் இளவரசி மீதான செல்வ வரி தொடர்பான நடவடிக்கையை கைவிடுவதாகவும், அதனடிப்படையில் வழக்குகளை திரும்பப்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள், வருமான வரித்துறை தரப்பில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT